இரத்தினபுரி – பதுளை பிரதான வீதியில் பட்டுகெதர பகுதியில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (01)அதிகாலை 1.45 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள திருமண வீடொன்றுக்கு மொனராகலையிலிருந்து சென்ற அல்டோ ரக கார் ஒன்றும் இரத்தினபுரியிலிருந்து பெல்மதுளை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் எஸ்.டி. குணபால (80 வயது), எஸ்.புஸ்பரஞ்சனி (60வயது), கார் சாரதியான சுசந்த பிரதீப்(45வயது) ஆகியோரே பலியாகியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய கார் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் காரின் முன் பக்கம் உருத்தெரியாமல் சின்னாபின்னமாகியுள்ளது. காருக்குள் சிக்கியவர்களை மீட்க அயலவர்கள் பெரும் பிரயத்தனம் செய்தனர். இரும்பு கடப்பாரைகளைக் கொண்டு உருக்குலைந்த காரின் பாகங்களை நீக்கியே உயிரிழந்தவர்களின் சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டன. நேருக்கு நேர் மோதுண்ட கெப் ரக வாகனம் அதே இடத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
காரில் பயணித்த நான்கு பேரில் மூன்று பேர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மொன்றாகலை பகுதியிலுள்ள ஒரே கிராமத்தை சேர்ந்த உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சடலங்கள் இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கெப்ரக வாகன சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தில் கெப் ரக வாகன சாரதியான எம். வருண (28), என்.எச்.துசார நில்மினி (27), எம்.டி.துரஞ்சன (05), ஏ.பி.ஐராங்கனி(49), என்.தரிந்து ஜயமினி(12) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.