உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;
கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை உயர் தரப் பரீட்சையின் இரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சைகள் இடம்பெற்றன. பகுதி 2 இற்கான பரீட்சைகள் இவ்வாறு இடம்பெற்ற நிலையில் இரசாயனவியல் பகுதி 2 இன் மூன்று கேள்விகளை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்கள் கம்பஹா பகுதியில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றுக்கு முன்பாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இம்முறை, தான் அனுமானித்த கேள்விகள் பரீட்சைக்கு வந்துள்ளதாகவும் எனவே வெற்றியை உறுதி செய்ய தமது தனியார் கல்வி நிறுவனத்தில் மேலதிக வகுப்புகளுக்காக மாணவர்களை அழைக்கும் விதமாகவே இந்த துண்டுப் பிரசுரம் தயார் செய்யப்பட்டு பரீட்சையை எழுதிவிட்டு வெளியில் வந்த மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுப் பிரசுரத்தில் உயர்தரப் பரீட்சையின் போது கேட்கப்பட்டிருந்த மூன்று பிரதான வினாக்கள் அப்படியே அச்சொட்டாக உள்ளடக்கப்பட்டிருந்தன.
வினாக்கள் அப்படியே பரீட்சை வினாத் தாளிலிருந்ததை அவதானித்துள்ள மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில் வினாப் பத்திரம் ஏற்கனவே வெளியாகிவிட்டதா என்ற சந்தேகத்தில் பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
அது தொடர்பில் பெற்றோர் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இந் நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் விடயத்தை பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதனையடுத்து கம்பஹா பகுதியில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதால் விசாரணைகள் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புசல்லவிடம் கையளிக்கப்பட்டது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் முதித்த புசல்லவின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ லால் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணைகளில் பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.
எனினும் பரீட்சையின் இடை நடுவே யாரோ ஒருவர் அந்த கேள்விகளை மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு ஏதோ ஒரு வகையில் வழங்கியுள்ளார் என்பதை பொலிஸார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த துண்டுப் பிரசுரத்தை விநியோகித்ததாக கூறப்படும் கந்தான, பட்டகம பகுதியைச் சேர்ந்த இருவரை முதலில் கைது செய்தனர்.
துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியரின் 67 வயதான தந்தையும் 29 வயதான சகோதரருமே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரிடமும் கம்பஹா உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீ லால் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய கம்பஹா – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் அச்சகம் ஒன்றினை நடத்தும் 42 வயதான நபர் ஒருவரை, குறித்த துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டமை தொடர்பில் பொலிஸார் கைது செய்தனர்.
இம் மூவரிடமும் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சிகள் வெளியே வந்த நிலையில், இந்த மோசடியின் பின்னணியில் 10 இலட்சம் ரூபா ஒப்பந்தம் ஒன்று உள்ளமையும், பரீட்சையின் இடை நடுவே கொழும்பு பிரபல பாடசாலை மாணவன் ஒருவன் ஊடாகவே பரீட்சை வினாத் தாள் வெளியில் வந்துள்ளமையும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இந்த மோசடியின் அனைத்து விடயங்களையும் வெளிப்படுத்தி கொள்ளும் பொறுப்பு குற்றப் புலனய்வு பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
பிரபல குற்ற விசாரணையாளரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் கட்டுப்பாட்டில் விசேட விசாரணைப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது முதலில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் பல் வைத்தியரையும் அவரது மகனையும் கைது செய்தனர். காரணம், குறித்த வைத்தியரின் மகனே வினாப் பத்திரத்தை வெளியே கசிய விட்டவராவார். அத்துடன் தனது மகனுக்கு விடை சொல்லி கொடுக்க மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபாவினை வைத்தியர் செலுத்தியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவரவே அவரும் உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த கைதுகளின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களே மிஷன் இம்பொஷிபல் பாணி மோசடி நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதாக அமைந்தது.
இந் நிலையில் தற்போது, கமலுக்கு உதவிய அல்லது ஒப்பந்த அடிப்படையில் உதவிய மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் இருவரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு பொலிஸ் குழு ஒன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று சட்டத்தரணியூடாக இரசாயனவியல் ஆசிரியர் கம்பஹா நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது அவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த பரீட்சை மோசடி தொடர்பில், இரசாயனவியல் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு 10 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில்,அதில் 9 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை அவரது வீட்டில் இருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை இரசாயன வியல் ஆசிரியருக்கு மேலதிகமாக அவரது தந்தை, சகோதரர், கம்பஹா அச்சக உரிமையாளர், கமல் மற்றும் கமலின் தந்தையான வைத்தியர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் உயிரியல் ஆசிரியரை தேடிய வேட்டையை புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையிலேயே; குறித்த மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.