கொழும்பில் நேற்று முன்தினம் நடந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தோல்வி கண்ட பிறகு அந்த அணியின் பொறுப்பு கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காலில் ஏற்பட்ட காயத்தால் 19 மாதங்களுக்கு பிறகு களம் திரும்பினேன். ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் நான் நன்றாக விளையாடவில்லை. இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் முடிந்ததும் என்னை பற்றி நானே சுய மதிப்பீடு செய்வதோடு, இன்னும் எத்தனை காலம் என் உடல் விளையாடுவதற்கு ஒத்துழைக்கும் என்று சோதிக்க உள்ளேன். நான் எவ்வளவு அனுபவம் பெற்றவனாக இருந்தாலும், அணிக்காக போட்டியை வெற்றி பெற செய்ய முடியவில்லை என்றாலோ?, அணிக்கு தேவையானதை செய்ய முடியவில்லை என்றாலோ அணியில் தொடர்ந்து இருப்பதில் என்ன பலன்?. 19 மாதங்களுக்கு பிறகு ஆட்டத்துக்கு திரும்பி இருக்கும் நான் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் பார்முக்கு திரும்ப முடியுமா? என்று பார்க்க போகிறேன். வருங்காலத்தில் எத்தனை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பார்ப்பேன். உடல் ஒத்துழைக்காமல் போனாலோ?, அணியின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவேற்ற முடியாமல் போனாலோ கிரிக்கெட்டில் இருந்து மகிழ்ச்சியாக ஓய்வு பெறுவேன்.
இவ்வாறு மலிங்கா கூறினார்.