ஆடம்பர வாகனமொன்றை திருடுவதற்கு நபர் ஒருவர் முற்பட்டபோது, அவர் அக்காருக்குள்ளிலிருந்த சாரதியால் வாகனம் செலுத்தப்பட்டநிலையில் பலநூறு மீற்றர் தூரம் அரைநிர்வாணமாக இழுபட்டுச் சென்ற சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
வொஷிங்டன் மாநிலத்தின் கென்ட் நகரில் மேற்படி கார் திருடன், வாகனமொன்றை திருட முயன்றான். காருக்குள் சாரதி இருப்பதை அவன் அவதானிக்கவில்லை.
அவன் வாகனத்தின் கதவை திறந்து உள்ளே நுழைய முயன்றபோது, காருக்குள்ளிருந்த சாரதி காரைச் செலுத்த ஆரம்பித்தார். ஆனாலும் கார் திருடன் தனது பிடியை விடாமல் வாகனத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.
இதனால் அவனின் காற்சட்டை கழன்ற நிலையிலும் பல நூறு மீற்றர் தூரம் அவன் இழுபட்டுச் சென்றான். பின்னர் காயமடைந்த நிலையில் அவன் வீதியில் கிடந்தான்.
இக்காட்சிகளை அப்பகுதியிலிருந்த சிலர் படம்பிடித்துள்ளனர். காரை திருட முயன்று காயமடைந்த நபரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கார் திருட்டு முயற்சிகள் தொடர்பாக இந்நபர் தேடப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.