நம்மையே அறியாமல் நாம் செய்யும் சில பழக்கங்களில் முதன்மை வகிக்கும் பழக்கம் தான் மூக்கை நோண்டுவது. படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நாளேடு படித்துக் கொண்டிருக்கும் போது, நண்பர்களிடம் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போதென, எத்தனையோ முறை நமக்கே தெரியாமல் நாம் மூக்கை நோண்டிக் கொண்டிருப்போம்.
சிலருக்கு மூக்கை நோண்டுவதில் ஓர் அலாதியான பிரியம் கூட இருக்கும் போல, எப்போது பார்த்தாலும் விரல் நகங்களை ஈட்டி போல வைத்தக் கொண்டு ஏதோ தங்க சுரங்கத்தில் தோண்டுவது போல நோண்டிக்கொண்டு இருப்பார்கள்.
இப்படி மூக்கை நோண்டுவதால் உடல்நல அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என செவிமடலியல் (காது, மூக்கு, தொண்டை) நல மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்…
டாக்டர் எரிக் வொய்க்ட்
நியூயார்க் பல்கலைகழக செவிமடலியல் நிபுணர் டாக்டர் எரிக் வொய்க்ட் மூக்கை நோண்டுவதால் அதிக சரும தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும். இதனால் சுவாசக் குழாய் தொற்று மற்றும் புரையழற்சி (sinusitis) ஏற்படலாம் என்றும் அச்சம் தெரிவிக்கின்றார்.
நகங்கள்!
அதிகமாக மூக்கை நோண்டுவதால் நகங்கள் மூலமாக மூக்கினுள்ளே பாக்டீரியா மற்றும் கிருமிகள் செல்கின்றன. இந்த கிருமிகளின் தாக்கம் ஒருவகையில் நீங்கள் மென்மேலும் மூக்கை நோண்ட தூண்டுகிறது.
இதர கிருமிகள்!
நகங்கள் மூலமாக மூக்கில் பரவும் கிருமிகள், மற்ற கிருமிகளும் உடலுக்குள் அதிகரிக்க ஒரு காரணியாக இருக்கிறது. இதனால், உங்கள் நாசி (மூக்கு) பகுதியில் நீங்கள் அவ்வப்போது சற்று அசௌகரியங்கள் உணரலாம்.
குழந்தைகள்!
பெரியவர்களை விட, குழந்தைகள் மத்தியில் தான் இந்த தாக்கங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என டாக்டர் எரிக் வொய்க்ட் குறிப்பிடுகிறார். குழந்தைகள் அதிகமாக மூக்கை நோண்டுவதால் மூக்கில் இரத்தம் வழிதல் ஏற்படலாம்.
இரத்தம்!
மூக்கின் பகுதியில் இரத்தம் வழிதல் ஏற்பட்டால் இரத்த போக்கு அதிகமாக இருக்கும். எனவே, குழந்தைகள் மத்தியில் இந்த பழக்கம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர் கடமை.
நிறுத்தம்
அவசியம்! நமது உலகில் எத்தனை பேருக்கு மூக்கை நோண்டும் பழக்கம் இருக்கிறது என்ற கணக்கெடுப்பு எல்லாம் இல்லை. ஆனால், பெரும்பாலும் வெளியிடங்களில் இல்லா விடினும், வீட்டில் மூக்கை நோண்டும் பழக்கம் பலருக்கும் இருக்கலாம். மூக்கு மற்றும் சுவாசக் குழாய் பகுதியில் தொற்று உண்டாக காரணியாக இருக்கும் இந்த பழக்கத்தை இன்றே விட்டொழிந்து விடுவது நல்லது.