இலங்கையில் அமைதி நிலவுவதால் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு அகதிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு அனுமதி வழங்க தாமதம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009க்கும் பின்னர் அமைதி நிலவுவதால் இலங்கைக்கு செல்ல விரும்புபவர்கள் மனு கொடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி 2016 – 2017ஆம் ஆண்டுகளில் மண்டபம் முகாமில் இருந்து 37 குடும்பத்தை சேர்ந்த 94 பேரும், பிற முகாம்களில் இருந்து 300 பேர் இலங்கை சென்றுள்ளனர்.
மேலும் மண்டபத்தில் இருந்து 32 குடும்பத்தை சேர்ந்த 76 பேர் இலங்கை செல்ல விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களின் நன்னடத்தை விவரம் மற்றும் குற்றவழக்குகள் உள்ளதா? என மத்திய மாநில உளவுத்துறையினர் விசாரித்து பாஸ்போர்ட் வழங்க தாமதபடுத்தி வருவதால், இவர்கள் தாயகம் திரும்ப காத்திருக்கின்றார்கள்.
தமிழகத்தில் இலங்கை அகதிகளை குறைந்த கூலி வேலைக்கு அழைத்து தரக்குறைவாக நடத்துவதால், போதுமான வருவாய் இன்றி தவிக்கின்றனர், இதனால் பிரிந்த உறவினர்களை சந்தித்து மன அமைதியுடன் வாழ பலர் இலங்கை செல்ல விரும்புகின்றனர்.
மேலும், 1982இல் இலங்கையில் இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையே இனப்போர் நடந்ததால் அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இவர்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தமிழகத்தில் அகதியாக தஞ்சம் புகுந்தனர்.
இதில் இராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் 1,842 பேர் மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 104 முகாமில் 60 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.
தற்போது இலங்கையில் அமைதி நிலவுவதால் மீண்டும் தாயகம் செல்ல அகதிகள் விரும்புகின்றனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.