நீட் தேர்வால் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவ-மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக மாணவி அனிதாவின் மரணம் அமைந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள குழுமூர் எனும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா, டாக்டர் ஆவதையே லட்சியமாக கொண்டு கல்வி பயின்றுள்ளார். ஆனால் அவருடைய லட்சியம் ஈடேறுவதில், நீட் தேர்வினால் ஏற்பட்ட தடங்கல் அவருடைய வாழ்க்கை முடிவுக்கு வர காரணமாகிவிட்டது. அவரை பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
அனிதாவின் பெற்றோர் சண்முகம்-ஆனந்தி தம்பதிக்கு 5 குழந்தைகள். இதில் 4 மகன்கள். ஒரே செல்ல மகள் அனிதா. இவர் துள்ளித்திரிந்த வயதிலேயே தாயை இழந்தார். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாயின் அரவணைப்புக்கு ஈடு உண்டோ? என்ற வலி அவருக்குள் இருந்தது. இருப்பினும் தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை சண்முகம் ஏற்றார். திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை சுமந்து, பிள்ளைகளை கரைசேர்க்க முயன்றார்.
கூரை வீட்டில் குடியிருந்த போதும், டாக்டராக வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அனிதா படித்தார். தங்கள் சகோதரியின் எண்ணம் மகிழ்ச்சியை தந்தாலும், அதற்கான வசதிகள் இருக்கிறதா? என்ற ஏக்கம் அவருடைய சகோதரர்களிடம் இருந்துள்ளது. ஆனால் தன் படிப்பின் மீதுள்ள நம்பிக்கையால், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம்பெற்று விடுவேன், என்பதே அனிதாவின் நம்பிக்கை வார்த்தையாக இருந்துள்ளது. தங்கள் சகோதரியின் கனவு ஈடேற அவருடைய சகோதரர்களும், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று, சம்பாதித்து அவருடைய படிப்புக்கு உறுதுணையாக இருந்தனர்.
அவர்களுடைய ஊக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்திய அவர் பத்தாம் வகுப்பில் 478 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து அவரை ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி கட்டணமில்லாமல் சேர்த்துக்கொண்டது. தனது கனவை நனவாக்கும் வேட்கையுடன் படித்த அனிதா, பிளஸ்-2 தேர்வில் 1,200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். இதனால் மருத்துவம் படிக்க தேவையான கட்-ஆப் மதிப்பெண் கிடைத்து விட்டது என்று தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அனிதாவும், அவருடைய குடும்பத்தினரும் மிகுந்த ஆனந்தமடைந்தனர்.
அந்த மகிழ்ச்சியை தகர்க்கும் வகையில் இடியாக வந்து சேர்ந்தது, நீட் தேர்வு குறித்த அறிவிப்பு. இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற அறிவிப்பானது, கோச்சிங் கிளாஸ் செல்ல வழியோ, வசதியோ அற்ற நிலையில் உள்ள கிராமப்புற மற்றும் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் சந்தித்த அதே வேதனை அனிதாவிற்கும் ஏற்பட்டது. கோர்ட்டு வரை சென்று போராடியபோதும், நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை என்ற அறிவிப்பு அனிதாவின் கனவை கலையச்செய்வது போன்று அவருக்கு தோன்றியது. இதனால் நொறுங்கிப்போன அவரை, தந்தையாலோ, சகோதரர்களாலோ தேற்ற முடியவில்லை. இந்த ஆண்டு மருத்துவம் படிக்க வாய்ப்பே இல்லை என்பதே, அவருடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக மாறிவிட்டது.
கெடுத்து விட்டார்கள் இதுகுறித்து அனிதாவின் தந்தை சண்முகம் கண்களில் நீர் வழிய கூறியதாவது;-
சிறு வயது முதலே டாக்டராக வேண்டும் என்ற உறுதியுடன் அனிதா படித்தாள். கூலி வேலைக்கு சென்று, அனிதாவை டாக்டராக்கி விட வேண்டும் என்பதில் நானும், எனது மகன்களும் உறுதியாக இருந்தோம். இந்த ஊரிலேயே நன்றாக படிக்கும் பெண் என்ற பெயர் வாங்கும் அளவுக்கு அனிதா படித்தாள். பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களால் தன்னுடைய கனவு ஈடேறிவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள். ஆனால் நீட் தேர்வால் அந்த கனவு கலைந்ததோடு, அவருடைய உயிரையும் பறித்து விட்டது.
நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்திருக்கும். அதனை கெடுத்து விட்டார்கள். கால்நடை மருத்துவம் படிக்க வந்த வாய்ப்பை அனிதா விரும்பவில்லை. இதுகுறித்து எங்களிடம் எதுவும் பேசாமல் விரக்தியிலேயே இருந்தாள். மனதுக்குள் புழுங்கி தவித்த அனிதா இப்படியொரு முடிவை எடுத்துவிட்டாள்.
இதனால் டாக்டராக பார்க்க வேண்டிய மகளை, மரண கோலத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. நீட் தேர்வினாலேயே இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். இந்நாட்டில் கூலி தொழிலாளர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகள் டாக்டராக கூடாதா?. சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றும் தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனது மகள் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக எடுத்துச்சென்ற போலீசார் அடக்குமுறையை கையாண்டனர். அதற்காக எங்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கினர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி அனிதாவுடன் 10-ம் வகுப்பு வரை படித்த தோழி இலக்கியா கூறுகையில், “மாணவி அனிதா சிறுவயது முதலே படிப்பில் ஆர்வமாக இருந்தார். 10-ம் வகுப்பு தேர்வு சமயத்தில் மொபட்டில் செல்லும் போது, கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது. அந்த வலியிலும் தேர்வு எழுதி 479 மதிப்பெண்கள் எடுத்தார். இதே போல் பிளஸ்-2 தேர்விலும் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தும் கர்வம் இல்லாமல் அனைவருடனும் சகஜமாக பழகுவார். அவரது சகோதரர்களின் வழிகாட்டுதலின் பேரில் நீட் தேர்வு சம்பந்தமாக கோர்ட்டு வரை சென்று போராடினார்” என்றார்.