Loading...
கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியா செயல்பட்டு வருகிறது.
டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்தபின்னர் வடகொரியா செயல்பாட்டிற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது.
எச்சரிக்கையையும் மீறி வடகொரியா செயல்பட்டதால் அந்நாட்டு மீதான பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் விளைவாக வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது.
தென் கொரியா பேச்சுவார்த்தைக்கு தயார் என அழைப்பு விடுத்தும் எதையும் கண்டுக்கொள்ளாத வடகொரியா எப்போதும் போல தன்னுடைய பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் ஜப்பானிற்கு மேலாக வடகொரிய ஏவுகணை பறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது வடகொரியா மீண்டும் அடாவடியாக ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்து உள்ளது. கடந்த வருடம் தொடக்கத்திலும் வடகொரியா இதுபோன்ற சோதனையில் ஈடுபட்டது. உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளானது வடகொரியா. உலக நாடுகளும் நடவடிக்கையில் இறங்கின. நிலை தொடர்ந்து மோசமாகும் நிலையிலும் புதிய சோதனை நடத்தி உள்ளதாக அறிவித்து உள்ளது.
வடகொரியா இன்று நடத்திய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை மிகவும் நேர்த்தியான வெற்றியை பெற்றது என அந்நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த வெடிகுண்டை மிக நீண்ட தூர இலக்கை கொண்ட ஏவுகணையுடனும் இணைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 6 முறை தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா இந்த வெடிகுண்டு பரிசோதனையை செய்து உள்ளது.
Loading...