எமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில், நேற்று மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நிகழ்வும், நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.
அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பந்தன் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
எங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
தமிழ் மக்கள் தமது இறைமையைப் போர்த்துக்கீசரிடம் இழந்தனர். அதற்குப் பின்னர் இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில்தான் செயற்பட்டு வருகின்றது.
ஆனால், பண்டா-செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று தான் எழுதப்பட்டன. தொடர்ந்தும் நாம் அவ்வாறே கோரி வருகின்றோம்.
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டனர்.
அந்தக் காரணத்தாலேயே தமிழ் இளைஞர்கள் வெளியக சுய நிர்ணய அடிப்படையில் தீர்வைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
வட்டுக்கோட்டைத் தீர்மானமும் அந்த அடிப்படையில்தான் எழுந்தது. இப்போது நாம் மீண்டும் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றோம்.
13 ஆவது அரசமைப்பு திருத்தம் ஒரு சிறந்த ஆவணமாக இருக்கின்ற போதிலும், அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையாது என நாம் 1988ஆம் ஆண்டே பகிரங்கமாகக் கூறினோம்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அதை முற்றுமுழுதாக நிராகரித்திருந்தது. அந்த அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் நாம் போட்டியிடவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு, அமிர்தலிங்கத்தின் உதவியுடன், அவரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எமது பாதை மிகவும் கடினமானது.
அண்ணன் அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு இறந்திருந்தாலும் அவர் ஆரம்பித்த அந்தப் பாதை, அந்தப் பயணம் இன்று வரை தொடர்கின்றது.
சந்திரிகாவின் காலத்தில் அரசியல் திருத்தம் சட்டமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் பொதுப்பட்டியல் இல்லை. பல விடயங்களில் அது அதிக இடைவெளிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.
ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஒஸ்லோவில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி ஆராயப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மற்றும் சர்வகட்சிக் குழுக்கள், அதிகூடிய அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வர வேண்டும், மக்களின் பாதுகாப்பும் அடையாளங்களும் உறுதி செய்யப்பட வேண்டும், அயல் நாடான இந்தியாவின் அரசியல் யாப்பை கற்க வேண்டும் என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தி தமது வரைபுகளைச் சமர்ப்பித்திருந்தனர்.
இவை அனைத்தும் அமிர்தலிங்கத்தின் காலத்திற்குப் பின்னர் நடைபெற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை 1988 ஆம் ஆண்டு நிராகரித்ததுடன், அது ஒரு முடிவான தீர்வாக அமையாது எனக் கூறிய காரணத்தாலேயே இப்போது புதிய செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்று வரை நாங்கள் அந்தக் கருமங்களில் ஈடுபட்டு வருகின்றோம். எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.
மேலும், இலங்கையில் ஏற்படுத்தப்படும் அரசியல் தீர்மானங்களில் இராணுவத்தினரின் கை ஓங்குவதை ஏற்க முடியாது.
அத்தீர்மானங்கள் முற்றுமுழுதாக அரசியல் ரீதியாகவே ஏற்படவேண்டும் என்பதையே நாம் இந்தியாவுக்குக் கூறி வருகின்றோம். இக்கருத்தை அமிர்தலிங்கமும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறி வந்தார்.
நாங்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவிச் செயலாளரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்திருந்த போது இந்த விடயங்களை அவர்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறியிருந்தோம். எமக்கு எந்த விதமான தீர்வு வேண்டும் என்பதை அவரிடத்தில் தெரிவித்திருக்கின்றோம்.
எங்களுடைய நியாயமான கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் கூடிய ஆதரவை வழங்கும் நிலை இன்று காணப்படுகின்றது.
நாங்கள் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு எப்போதும் தயாராகவே இருந்துள்ளோம்.
எமது நிலைப்பாடு நியாயமானது. நாம் அநீதியாகவோ, நியாயமற்ற முறையிலோ எதையும் கேட்கவில்லை.
தற்போது எமக்கு சர்வதேச ஆதரவு பெருகி வருகின்றது. இவற்றுக்கு மேலாக எமது மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது மக்கள் குறிப்பிட்ட ஒரு கொள்கைக்குப் பின்னால் ஒற்றுமையாக இருந்தார்கள். அதை நாம் மதிக்கின்றோம்.
ஏனெனில், அது மிகவும் பெறுமதியான ஒரு விடயம். அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒற்றுமையை நாம் குலைத்துவிடக் கூடாது.
நாங்கள் நியாயமான கோரிக்கையின் பின்னாலேயே ஒருமித்து நிற்கின்றோம் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியிலும் இன்று ஒரு மாற்றம் ஏற்பட்டிக்கின்றது. தற்போதைய நிலை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப் போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.
இந்த நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்பட வேண்டுமாயின், பொருளாதாரக் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டுமாயின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படா விட்டால் இந்நாட்டுக்கு ஓர் எதிர்காலம் இல்லை. இதுவே உண்மை.
அமிர்தலிங்கம் சிறந்த ஒரு சட்டத்தரணி. ஆனால், அவர் தனது தொழிலையோ, குடும்பத்தையோ சரிவரக் கவனிக்கவில்லை. மாறாக அவர் தன்னை முழுமையாகவே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்திருந்தார்.
அவர் இறக்கும் வரையில் இடம்பெற்ற சகல கருமங்களிலும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார். அவர் மறைந்த பின்னரும் அவரது பயணமே இற்றை வரை தொடர்கின்றது.
அவர் தொடக்கி வைத்த பயணத்துக்கு விரைவில் ஒரு முடிவு வரும். எமது மக்களுக்கு நியாயமான, நிதானமான, ஒழுங்கான ஓர் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும்.
அதனைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச சமூகமும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.