சென்னை சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் மின்விசிறியில் மின்சாரம் பாய்ந்து தாய், 6 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்ட்ரலில் மின்விசிறியில் மின்சாரம் பாய்ந்து தாய்- 6மாத குழந்தை பலி
அருணா, திவான்
ராயபுரம்:
சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் சிவா. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அருணா. இவர்களது மகள்கள் கீர்த்தனா (5), கீர்த்தி (3), மகன் திவான் (6 மாதம்). நேற்று இரவு 4 பேரும் தூங்கி கொண்டு இருந்தனர்.
அருணா தனது அருகில் குழந்தை திவானை வைத்தப்படி தூங்கினார். அவரது அருகில் டேபிள் மின்விசிறி வைத்து இருந்தார். அதில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. நள்ளிரவில் தூக்க கலக்கத்தில் அருணாவின் கை மின்விசிறி மீது பட்டது. உடனே அவர் மீதும், குழந்தை மீதும் மின்சாரம் பாய்ந்தது.
அருகில் படுத்து இருந்தவர்கள் நன்றாக தூங்கி கொண்டு இருந்ததால் அவர்களுக்கு தெரியவில்லை. மின்சாரம் தாக்கியதில் அருணாவும், குழந்தை திவானும் உயிரிழந்தனர். அருணாவின் அண்ணன் சூரியா பணி முடிந்து வீட்டுக்கு வந்து விளக்கை போட்ட போது தாயும், குழந்தையும் அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்தார். 2 பேரையும் மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. 2 பேரையும் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.