அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வு முறையால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகம் முழுவதும் மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரசியல் கட்சிகளை தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் பள்ளி-கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், மறியல், மனித சங்கிலி, பேரணி ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடித்தது. சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக கல்லூரியில் இருந்து சாலைக்கு வந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாணவர்கள் வெளியே வரமுடியாதபடி கல்லூரி கேட்டை பூட்டு போட்டு பூட்டினர். இதனால் மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்குள் அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று மாணவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 30 மாணவர்கள் மட்டும் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கல்லூரி முதல்வர் இருளப்பன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே படுத்து தூங்கினர
இன்று காலை கல்லூரிக்கு வந்த மற்ற மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து இன்று முதல் கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. 5 நாட்கள் விடுதியும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாளையங்கோட்டையில் ஜான்ஸ் கல்லூரி, பேட்டை இந்து கல்லூரி, ஐ.டி.ஐ. மாணவ- மாணவிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டை பிரான்சிஸ் சேவியர்ஸ் என்ஜினியரிங் கல்லூரி, சேரன்மாதேவி ஸ்காடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ- மாணவிகளும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பின்னர் பாலமதி மெயின் ரோட்டில் மாணவ, மாணவிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். வாயில் கறுப்பு துணி கட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே உள்ள திருநெய்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதே போல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டியிலும் அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் அரசு பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில்முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் தொடர்ந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மதுரை மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.