மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, சொத்துக் குவிப்பு வழக்கில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு, தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீடு, நினைவிடமாக மாற்றப்படும் என, முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, தங்கவேலு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
குறித்த மனுவில், ‘போயஸ் கார்டன் வீட்டில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாக, உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளதாகவும்,
எனவே அந்த வீட்டை நினைவிடமாக மாற்றினால், தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும் ஆகவே நினைவிடமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய அமர்வின் போது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயணண், முன்னிலையாகியதுடன்,
குறித்த வழக்கு விளம்பர நோக்கில் தொடரப்பட்டுள்ளதாகவும் போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதாவின் தாயாரால் வாங்கப்பட்டது எனவும் சொத்துக் குவிப்பு வழக்கில், அந்த வீடு இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்வதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கில் குறிப்பிட்டுள்ள வீடு, சொத்துக் குவிப்பு வழக்கில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு, தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் விசாரணையை, 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.