வேகமும், பரபரப்பும் இன்றைய வாழ்க்கையின் அடையாளங்கள். மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையை இந்த இரண்டு சக்கரங்களும் சேர்ந்துதான் உருட்டிக்கொண்டு செல்கின்றன. அதனால் எங்கும் எதிலும் தேவையற்ற அவசரம் நீடிக்கிறது. அமைதியும், நிதானமும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
ஒருகாலத்தில் வீட்டில் அமைதியாக இருந்த பெண்கள் இன்று வீடு, அலுவலகம், வெளியுலகம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அது வரவேற்கத் தகுந்ததுதான். ஆனால் அதற்காக அவசரம் அவசியம் இல்லை. எதையும் நிதானித்து முடிவு செய்யும் நிலையில் பெரும்பாலான பெண்கள் இல்லை. பல விஷயங்களை அவர்கள் ஒன்றாக கவனித்து செய்யவேண்டியதிருப்பதால், அவசரம் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. வேலைகளை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்ற எண்ணம், அவசரத்தை உருவாக்கிவிடுகிறது. அவசரம், அந்த வேலையில் தெளிவற்ற நிலையை உருவாக்கிவிடுகிறது.
அவசர அவசரமாக சிந்திக்கும்போது முடிவெடுக்கும் திறன் குறையும். தான் செய்தது சரிதானா? என்ற குழப்பம் எப்போதும் மனதில் நீடித்துக்கொண்டே இருக்கும். அதனால் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கும் நிலை தோன்றும். பாதி செயல்கள் நடந்த பின்பு பின்வாங்கினால் அது பலவிதங்களில் நஷ்டத்தை உருவாக்கும். அவசரத்தில் பல விஷயங்களை கவனிக்க மறந்துவிடுவோம். அது இயல்பு. அவசரம் எதையும் ஆழ்ந்து கவனிக்கவோ, கிரகிக்கவோவிடாது.
அவசரக்காரர்களுக்கு, மற்றவர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை காதுகொடுத்து கேட்ககூட நேரம் இருக்காது. தேவையற்ற ஒரு காரியத்தில் இறங்கிவிட்ட பின்பு, ‘அடடே கொஞ்சம் யோசித்திருக்கலாமே! மற்றவர்கள் சொன்னதை பரிசீலித்திருக்கலாமே!’ என்று நினைக்கத் தோன்றும். காலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது.
தீர்மானிக்கும் திறன் இன்றைய வாழ்க்கைக்கு மிக அவசியம். இந்த திறன் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் தீர்மானம் என்பது அமைதியான மனநிலையில் எடுப்பது. அமைதியான மனநிலையில் மனம் நல்லவை கெட்டவைகளை சரியாக எடுத்துச் சொல்லும். லாப-நஷ்டங்களைப் பற்றி சிந்திக்கும். சரி, தவறு எல்லாமே அமைதியாக சிந்திக்கும் போது மட்டுமே புலப்படும். அப்படி எடுக்கும் தீர்மானத்தில் தெளிவு இருக்கும். அவசரம், பதற்றத்தை உருவாக்கி தீர்மானிக்கும் திறனை குறைத்து விடும். அப்போது எடுக்கப்படும் முடிவுகள் சிக்கலை உருவாக்கிவிடும். அந்த சிக்கல்கள் அவரை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் பாதிக்கும்.
நெருக்கடியான நேரத்தில் அவசரப்பட்டுவிட்டால், அந்த நெருக்கடியை சமாளிக்கும் திறன் இருக்காது. ஒருவித சிடுசிடுப்பு தொற்றிக்கொள்ளும். பதற்றமான வார்த்தைகள் வெளிவரும். சுற்றி இருக்கும் உறவுகளை புண்படுத்த வேண்டியிருக்கும். அது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
எந்த காரியத்தையும் பரபரப்போடு செய்தால் தவறுகள் ஏற்பட்டுவிடும். கவனச்சிதறல் தோன்றும். பரபரப்போடு ஒரு செயலை செய்தால் அதற்கு அதிக நேரம் தேவைப்படும். பரபரப்பு வேகம் மனதை ஒருநிலைப்படுத்தும் சக்தியை குறைக்கும்.
பரபரப்பை குறைக்கவேண்டும் என்றால், திட்டமிட்டு செயல்படவேண்டும். திட்டமிட்டு செயல்படவேண்டும் என்றால், அதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கவேண்டும். நேரத்தை ஒதுக்கி, திட்டமிட்டு செய்யப்படும் வேலைகள் எளிதாக வெற்றியை நோக்கி நகரும்.
என்றோ ஒருநாள் பரபரப்பு என்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எப்போதுமே பரபரப்பு என்பது உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் விஷயம். உயர் ரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் இதனால் ஏற்படுகிறது.
பரபரப்பிற்கும்- சுறுசுறுப்பிற்கும் என்ன வித்தியாசம்?
பரபரப்பு ஒருபோதும் சுறுசுறுப்பு ஆகாது. பரபரப்பு மனக்குழப்பத்தை மட்டுமே உருவாக்கும். மனம் அமைதியாக இருக்கும்போது தான் தெளிவுநிலை உண்டாகும். அப்போதுதான் ஒருவேலையை எப்படி செய்வது- எதை முதலில் செய்வது? என்பதெல்லாம் புரியும். இப்படி பணிகளை வடிவமைத்து உற்சாகமாக செய்வதுதான் சுறு சுறுப்பு.
பரபரப்பாக செய்யும் வேலை சீக்கிரமே முடிந்துவிடும் என்று நினைப்பது தப்புக்கணக்கு. அவசர பரபரப்பு என்றுமே ஆபத்து. இதை வாகன ஓட்டிகள் அனுபவத்தில் உணர்ந்திருப்பார்கள். நீங்கள் வாகனம் ஓட்டும்போது உங்களுக்கும் அது புரியும். இன்று நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கும், ஆபத்துகளுக்கும், தவறுகளுக்கும் பரபரப்பும், பதற்றமுமே காரணம்.
ஒரு விஷயத்தை நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும்போதும்- மற்றவர்கள் உங்களிடம் ஒரு விஷயத்தை பேசும் போதும் நிதானம் மிக அவசியம். நிதானம் இல்லாவிட்டால் நீங்கள் பேச விரும்பியதை மற்றவர்களுக்கு உணர்த்த முடியாது. அதுபோல் மற்றவர்களால் உங்களுக்கு சொல்லப்படும் விஷயத்தையும் நீங்கள் தப்பாகத்தான் புரிந்துகொள்வீர்கள். நிதானம் மட்டுமே உங்களுக்கு சரியான, நிறைவான வாய்ப்பினை உருவாக்கித்தரும்.