ஆவணி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளான பிரதமைதினத்தில் இருந்து அதாவது செப்டம்பர் 6-ந்தேதி (புதன்கிழமை)யில் இருந்து புரட்டாசி மாதம் அமாவாசை வரை அதாவது செப்டம்பர் மாதம் 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரையிலான 14 நாட்களே மகாளய பட்ச நாட்களாகக் கருதப்படுகிறது.
இந்த 14 நாட்களும் தர்ப்பணம், சிரார்த்தம் செய்தால் தான் மகாளய அமாவாசை வழிபாடுக்கான முழுப்பலன்களையும் நாம் பெற முடியும். இந்த 14 நாட்களில் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் தர்ப்பணமானது காசி, கயாவில் செய்யப்படும் பித்ரு காரியங்களை விட அதிக மேன்மையானது.
பொதுவாக ஒருவர் ஒரு வருடத்தில் தன்முன்னோர்களுக்காக 95 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது. மிக மிக சொற்பமானவர்களே இதை செய்கிறார்கள்.
அமாவாசை நாட்களில் கூட பெரும்பாலனவர்கள் தங்கள் பித்ரு தெய்வங்களை நினைத்துப் பார்ப்பதில்லை.
அப்படிப்பட்டவர்கள் மகாளய பட்ச நாட்களில் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலனை பெற முடியும்.
அதிலும் குறிப்பாக மகாளயபட்ச நாளில் வரும் மத்யாஷ்டமி தினத்தன்று (செப்டம்பர் 13-ந்தேதி, புதன்கிழமை) செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம், தான தர்மங்கள் மற்ற புண்ணிய நாட்களில் கிடைக்கும் பலனை விட கூடுதலாக 20 மடங்கு பலன் தர நல்லது.
அது போல மகாளய பட்சத்தில் வரும் துவாதசி தினத்தன்று (செப்டம்பர் 17-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) செய்யும் தர்ப்பணத்துக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.
மகாளய அமாவாசை தினத்தன்று (செப்டம்பர் 19-ந்தேதி செவ்வாய்க்கிழமை) பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு புண்ணிய பலன்களைத்தர வல்லது.
எனவே மகாளய பட்சத்தின் 14 நாட்களும் நீங்கள் பித்ருக்களை வழிபடுவது உங்கள் குடும்பத்தை மேன்மைப் படுத்துவதாக இருக்கும்.
இந்த 14 நாட்களில் தந்தை வழி சொந்தங்களான பித்ரு வர்க்கத்தையும், தாய்வழி சொந்தங்களான மாத்ரு வர்க்கத்தையும் உறவினர்கள் நண்பர்களாக காருணீக வர்க்கத்தையும் பட்டியலிட்டு வழிபடுவது நல்லது.