பெண்களின் பிரசவ வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அப்படி ஒரு கொடிய வலியை தாண்டித்தான் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள்.
இந்நிலையில், சீனாவில் தனது வீட்டார் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளாத காரணத்தால் வலி தாங்க முடியாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இப்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். வயிற்றிலிருக்கும் குழந்தையின் தலை பெரியதாக இருந்த காரணத்தினால் சுக பிரசவத்தின் மூலம் குழந்தையை பெற்றெடுப்பது ஆபத்தான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் கையெழுத்து கேட்டுள்ளனர். ஆனால், அப்பெண்ணின் கணவர் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் , சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்யுங்கள் எனக்கூறி கையெழுத்திட மறுத்துள்ளார்.
இந்நிலையில், பிரசவ சிகிச்சை வார்டில் இருந்த அப்பெண் வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இதில், அப்பெண்ணும் அவரது வயிற்றில் இருந்த கருவும் இறந்துள்ளது.
இந்த செய்தி சீனாவை விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. பிரசவ வலியை ஒரு பெண் மட்டுமே அனுபவிக்கிறாள், எனவே தனக்கு எந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவள் தான் தீர்மானிக்க வேண்டும். எனவே கையெழுத்தை அந்த பெண்ணிடம் வாங்கியிருக்க வேண்டும் என மருத்துவமனை வட்டாரத்தில் சிலர் தனது கருத்தை தெரிவித்துள்ளனர்.
இதை குறித்து அப்பெண்ணின் கணவர், எனது மனைவி மிகவும் தைரியமானவள், அவள் இப்படி ஒரு முடிவை எடுப்பாள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.