அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய ‘ஹார்வே’ புயல் பலத்த சேதங்களை உண்டாக்கியுள்ளது. சுமார் 40 பேர் வரை இந்த புயலினால் பலியாகியுள்ளனர். பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் ஜிம்மி கார்ட்டர், ஜார்ஜ் புஷ், அவருடைய மகன் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், ஒபாமா ஆகிய ஐந்து பேரும் ஒன்றினைத்துள்ளனர். ‘ஒன் அமெரிக்கா அப்பீல்’ என்ற பெயரில் அவர்கள் நிவாரண நிதியை அறிவித்துள்ளனர்.
அந்த நிதிக்கு அவர்கள் ஐந்து பேரும் கணிசமான தொகை அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். அத்துடன் பொதுமக்கள் அளிக்கும் நிதியும் அதில் சேர்க்கப்பட்டு அரசின் வெள்ள நிவாரணத் திட்டத்துக்கு அளிக்கப்படும் என்று அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட முறையில் 10 லட்சம் டாலர் டெக்ஸாஸ் வெள்ள நிவாரண நிதி அளிப்பதாக அதிபர் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.