ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் முதலை காட்சியகம் ஒன்று, 2011-ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. மிகப் பெரிய தொட்டியில் 16 அடி நீளமுள்ள உப்பு நீர் முதலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முதலையை மிக அருகில் சென்று பார்ப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் இங்கே வசதி செய்யப்பட்டிருக்கிறது. 8,700 ரூபாய் கட்டணத்தில் 30 நிமிடங்கள் மெல்லிய பிளாஸ்டிக் தொட்டிக்குள் அமர்ந்தபடி, முதலையை ரசித்துவிட்டுத் திரும்பலாம்.
முதலைக்கு மாட்டிறைச்சி, கோழி இறைச்சி போன்றவற்றைக் கம்பியில் சொருகி வைத்துவிடுவதால், மனிதர்கள் இருக்கும் கூண்டுக்கு அருகிலேயே முதலை சுற்றிச் சுற்றி வருகிறது. 360 டிகிரிக்கு முதலையை முழுவதுமாகக் கண்டு ரசிக்கலாம்.
ஒரு கூண்டுக்குள் இருவர் அனுமதிக்கப்படுகிறார்கள். 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கூண்டு மேலே வந்துவிடும். “இது என் வாழ்நாள் அனுபவம். நான் இவ்வளவு நல்ல அனுபவத்தை எதிர்பார்த்து இங்கே வரவில்லை. ஊர்வனப் பிராணிகளிலேயே உப்புநீர் முதலைதான் மனிதனுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியது.
மனிதனைச் சாப்பிடும் முதலை என்றுதான் சொல்வார்கள். நேருக்கு நேர் மிக அருகில் பார்த்தபோது உடல் நடுங்கிவிட்டது. கூண்டுக்குள் இருக்கிறேன் என்பதே மறந்து பயம் பிடித்துக்கொண்டது. ஒருவேளை கூண்டு உடைந்தால் முதலைக்கு இரையாகிவிடுவது நிச்சயம்.
முதலையின் ஒவ்வொரு பல்லும் 4 அங்குல நீளத்துக்கு இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகே பயம் விலகி, ரசிக்க ஆரம்பித்தேன்” என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி நெல்லி வின்ட்டர்ஸ்.
மரண விளையாட்டு!
ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் பகுதியிலுள்ள ஸாவோட் கிராமத்தைச் சேர்ந்தவர் உடாலோவ். இவரது வீடு இந்தக் கிராமத்தில் இருந்தாலும் அருகில் இருக்கும் நகரத்தில் வேலை பார்ப்பதால், எப்பொழுதாவதுதான் வீட்டுக்கு வருவார்கள்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சில நாட்கள் வீட்டில் தங்குவதற்காக உடாலோவ் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வந்தனர். ஆனால் வீட்டைப் பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.
எந்த நேரமும் இடிந்துவிழக்கூடிய அளவுக்கு வீடு மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு முன்பக்கம் இருந்த இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில், அரசாங்கம் சாலை போட்டிருந்தது. “பிழைப்புக்காக வெளியூர்களில் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது.
எப்போதாவது இந்தக் கிராமத்துக்கு வந்து, தங்கிவிட மாட்டோமா என்ற எண்ணம் எங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். எங்களுக்கு இந்தக் கிராமமும் வீடும் அவ்வளவு முக்கியம். எங்களிடம் தகவல் கூடத் தெரிவிக்காமல், அரசாங்கம் வீட்டை இடித்திருக்கிறது. நிலத்தை அபகரித்துக்கொண்டிருக்கிறது.
இனி இந்த வீட்டில் எங்களால் குடியிருக்க இயலாது. எந்த நேரமும் இடிந்து விழும் அளவுக்குச் சேதப்படுத்தியிருக்கின்றனர். எங்களுக்குத் தகவல் தெரிவிக்காதது, வீட்டைச் சேதப்படுத்தியது, நிலத்தை எடுத்துக்கொண்டது போன்ற குற்றங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருக்கிறேன்.
எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை எங்கள் நிலத்தின் மீதுள்ள சாலையைப் பயன்படுத்தக்கூடாது என்பதற்காக, மரக்கட்டைகளைத் தடுப்பாகப் போட்டிருக்கிறேன். 40 லட்சம் ரூபாய் கிடைத்தால்தான் நாங்கள் வீட்டை மீண்டும் கட்ட முடியும்” என்கிறார் உடாலோவ்.
அரசாங்கமே இப்படிச் செய்யலாமா?