பெரும்பாலான பெண்கள் முகத்தில் சுருக்கம் வராமல் இருப்பதற்காக காண்பிக்கும் அக்கறையை கழுத்து பகுதியில் ஏற்படும் சுருக்கங்கள் மீது காட்டுவதில்லை. சரியான உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சினைகள், சூரிய கதிர்களின் தாக்கம் போன்றவை கழுத்து சுருக்கங்கள் தோன்றுவதற்கு வழிவகுக்கின்றன. அவை விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன. எளிமையான வழிகளை கையாண்டு கழுத்து சுருக்கங்களை போக்கலாம்.
* அன்னாசி பழத்தைக் கொண்டு கழுத்து சுருக்கங்களை அகற்றிவிடலாம். அன்னாசி பழத் துண்டுகளை கூழாக அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். அதனை கழுத்து பகுதியில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை இப்படி மசாஜ் செய்து வந்தால் கழுத்து சுருக்கங்கள் நீங்கிவிடும்.
* முட்டைக்கோஸும் கழுத்து சுருக்கங்களை நீக்கும். ஒரு தேக்கரண்டி முட்டைக்கோஸ் சாறுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்வது நல்ல தீர்வை கொடுக்கும்.
* ஆலிவ் எண்ணெய் கொண்டும் மசாஜ் செய்யலாம். அது கழுத்து பகுதியில் இருக்கும் பழைய செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாக உதவும். அதன் மூலம் கழுத்து சுருக்கங்கள் குறையும். இரவில் தூங்க செல்லும்முன் ஆலிவ் ஆயிலுடன் கிளிசரினை சேர்த்து கழுத்து பகுதியில் தடவி வருவது கழுத்து சுருக்கங்களை கட்டுப் படுத்தும்.
* நான்கு பாதாம் பருப்பை அரைத்து, அதனுடன் பால் சேர்த்து பசை போல் குழைத்து கொள்ள வேண்டும். அதனை கழுத்தில் சுருக்கங்கள் இருக்கும் இடத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் கழித்து, உலர்ந்த துணியால் துடைக்க வேண்டும். வாரம் ஒருமுறை இந்த முறையை கடைப்பிடித்து வந்தால் விரைவில் சுருக்கங்கள் நீங்கும்.
* தக்காளி பழைய செல்களை நீக்கி, புதிய தோல் செல்கள் உருவாக துணைபுரியும். தக்காளி பழத்தை கூழாக்கி அதனுடன் ரோஸ் வாட்டர், அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பசை போல் குழைத்துக் கொள்ள வேண்டும். அதனை கழுத்து பகுதியில் தேய்த்துவிட்டு உலந்த பின்னர் துணியால் துடைத்து எடுக்க வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.