சிவபெருமானிடத்தில் அறக்கடவுள் என்ற ரிஷபம் வாகனமாக இறைபணி செய்துகொண்டிருக்கிறது. ஒரு சமயம் பார்வதி தேவியார் உலக நலன் பொருட்டு மயில் வடிவமாகக் காவிரிக்கரை அருகே எழுந்தருளி பரமனைக் குறித்துத் தவம் இயற்றினார். அவரைக் காண்பதற்காக ரிஷபத்தின் மீது ஏறி ஈசன் வந்து கொண்டிருக்கும் போது, தேவர்களும் பிரம்மா,விஷ்ணுவும் அவரவர் வாகனங்களில் ஏறி வந்து கொண்டிருந்தனர்.
ரிஷபம் அந்த சமயத்தில் மிகுந்த ஆணவத்துடன் முன்னே சென்று மாயூரம் தலத்தை அடைந்து விட்டது. அது தன் நினைவில் நான் அவரைச் சுமப்பதால் மட்டுமே மதிப்போடு விளங்குகிறார். நான் இல்லாமல் அவரால் சிறப்போடு இயங்க முடியாது என்று ஆணவம் கொண்டது.
ரிஷபத்தின் எண்ணத்தில் ஆணவம் ஏற்பட்டத்தைத் தன்னுடைய ஞான திருஷ்டி யால் கண்டறிந்த ஈசன் தன் சிரசில் இருந்த கேசம் ஒன்றை எடுத்து அதன் முதுகின் மேல் வைத்துத் துலாக்கட்டத்தின் நடுவில் வைத்து அழுத்தினார். பாரம் தாங்க முடியாமல் ரிஷபம் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தது.
மயக்கம் தெளிந்த பிறகே ரிஷபத்துக்கு தன் நிலை புரிந்தது. தன் தவறை உணர்ந்தது. பிறகு தனது மனம் ஆண வத்தால் சிறிது நேரம் பாவம் செய்து விட்டேன் என்றும் இந்த ஆணவ மலம் தொலைந்து தங்களது அருளை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும்? என்று ரிஷபம் கேட்டது.
அதற்கு சென், மாயூரம் துலாக்கட்ட தீர்த்தத்தில் இதே இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து தினமும் புனித நீராடி வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குரு தட்சிணாமூர்த்தி வடிவாக வந்து ஏற்போம் என்றார். அவ்வாறே ரிஷபமும் பூஜை செய்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்க சிவபெருமான் குருவாய் வடிவெடுத்து அவருக்கு ஞான உபதேசம் செய்து அருளினார்.
மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தின் நடுவே ரிஷபம் கோயில் கொண்டார். அதுவே ரிஷபத் தீர்த்தக்கட்டமாக இறைவன் திருஉள்ளப்படியே ஆகி விட்டது.