மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள சேனா கிராமத்தை சேர்ந்த பெண்களின் தலைமுடிகள் மர்மமான முறையில் வெட்டி வீசப்படும் சம்பவங்கள் நடந்து வந்தன.
தூங்கும் நேரத்தில் யாரோ மர்ம ஆசாமி பெண்களின் தலை முடியை வெட்டி வீசுவதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட அவர்கள் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில், சேனா கிராமத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றி கொண்டிருந்தார்.
அவர் தான் தங்களின் தலைமுடியை வெட்டி வீசும் நபர் என கருதி கிராமத்து பெண்கள் அவரை மீன்பிடிக்கும் வலையை வீசி பிடித்தனர்.
பின்னர், அங்குள்ள தண்ணீர் பம்பில் வாலிபரை கட்டி வைத்து கம்புகளால் சரமாரியாக அடித்தார்கள்.
வலி தாங்கமுடியாத வாலிபர் மயங்கினார். சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிசார் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில் வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், அவர் பெண்கள் தலைமுடியை வெட்டவில்லை என்பதும் தெரியவந்தது.
சம்பவம் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.