பெரம்லூரில் நடைபெறும் விடுதலை சிறுத்தை கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரை பார்ப்பதற்காக சென்றேன்.
ஆனால் அங்கு நான் அவரை நேரில் பார்க்கவில்லை. அங்கிருந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு வந்தேன். தற்போது அமைச்சர்கள் ஜெயலலிதாவின் மரணம் பற்றி முரணான தகவல்களை வெளியிடுகின்றனர்.
முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறி ஜெயலலிதாவுக்கு அமைச்சர்கள் துரோகம் செய்யக் கூடாது. ஜெயலலிதா மரணம் குறித்து 6 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக செயலாற்ற வேண்டும். மத்திய அரசின் செயல்பாட்டுக்கு யார் உடன்படவில்லையோ அவர்களின் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.