மற்றவர்களைப் பார்த்தால் நாம் நமஸ்காரம் செய்வதுகூட நாம் வளர்வதற்கான ஒரு வழிதான். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் நம் உள்வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு கலாச்சாரமாகவே அறிந்து வந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதிதான் யோக ஆசனங்கள்.
இந்த உடல் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும். நாம் சொல்வதை இந்த உடல் கேட்கவேண்டும். அது சொல்வதுபோல நாம் கேட்கக்கூடாது. அதற்காகத்தான் அத்தனை ஆசனப் பயிற்சிகளும். உடல் உறுப்புகள் நமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது எந்த ஒரு செயலிலும் நாம் நினைப்பதுபோல் அவை இயங்கும்.
கைகளை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், கால்களை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும், ஒரு பொருளை எப்படி வாங்குவது, எப்படிக் கொடுப்பது, எப்படி சாப்பிடுவது என்று அனைத்தையுமே, ஒரு விஞ்ஞானமாக, ஒரு மனிதன் விதையாகவே இருந்துவிடாமல் எப்படியாவது மலர வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கற்றுத் தரப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் நமஸ்காரமும்.
உங்கள் நாக்கு பேசுவதைக் காட்டிலும் உங்கள் கைகள் அதிகம் பேசி விடுகின்றன. ஒருவரை, நெஞ்சுக்கு நேரே இரு கை குவித்து நமஸ்காரம் செய்து வரவேற்கும்போது, உங்களுக்குள் எந்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது என்பதை கவனியுங்கள். இதையே ஒரு கை மட்டும் பயன்படுத்தியோ அல்லது வேறு மாதிரி கைகளை வைத்தோ வணங்கி அப்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வை கவனியுங்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை அப்போது உங்களால் நன்கு புரிந்துகொள்ள முடியும்.
கை குவித்து செய்யும் நமஸ்காரத்தையே முகத்திற்கு நேராக அல்லது தலைக்கு மேலே வைத்து என்று செய்யும் போதும்கூட வெவ்வேறு விதமான உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதை காணலாம். எங்கு எப்படி நமஸ்காரம் செய்வது என்பதும் இந்தக் கலாச்சாரத்தில் கற்றுத் தரப்பட்டிருக்கிறது.
நமஸ்காரம் வெவ்வேறு விதமாக செய்யும்போது நுரையீலின் வெவ்வேறு பகுதிகள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் உள்ளங்கைகளில்தான் நரம்புகள் முடிகின்றன. எனவே இரு உள்ளங்கைகளையும் குவித்து வணங்கும்போது உங்கள் சக்திநிலை ஒன்றிணைந்து செயல்படுகிறது. யோகாவில் கைகளில் வைக்கும் முத்திரைகளுக்கு என முழு விஞ்ஞானமே இருக்கிறது.
நமஸ்காரம் என்பதும் ஒரு முத்திரைதான். கைகளைக் குவித்து வணங்கும்போது, முக்கியமாக எதிரில் நிற்பவரைப் பற்றிய உங்கள் விருப்பு-வெறுப்புகள் மறைகின்றன. அப்போது அவருக்குள் இருக்கும் தெய்வீகத்தையும் உங்களால் உணர முடிவதால் உங்களால் உண்மையாகவே வணங்க முடிகிறது.
உடல் என்பது மிகவும் சூட்சுமமான சூப்பர் கம்ப்யூட்டர். ஆனால் இதை முறையாக எப்படி உபயோகப்படுத்துவது என்பதை மறந்து வருகிறோம். நீங்கள் ஓரிடத்திற்கு தனியாக சென்று நெஞ்சுக்கு நேரே குவித்து வெறுமனே கும்பிட்டு பாருங்கள். கடவுளைக்கூட நினைக்க வேண்டாம். நீங்கள் நாத்திகராகக் கூட இருங்கள்.
ஆனாலும் இதை 10 நிமிடம் தனியாக உட்கார்ந்து செய்து பாருங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் உள்நிலையில் மாறுதல்களைக் கவனிக்க முடியும். இவை எல்லாமே அறிவுப்பூர்வமாக உணர்ந்த ஒரு விஞ்ஞானமாக நமது கலாச்சாரத்தில் இருந்தது. ஆனால், இப்போது மேற்கத்திய நாட்டிலிருந்து வருவதை மட்டுமே நாம் விஞ்ஞானமாக அங்கீகரிக்கிறோம்.