அந்த நாட்கள்’ எனப்படும் மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். அந்த மூன்று நாட்களும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சில அசௌகரியங்கள் ஏற்படும். இன்றையச் சூழலில் பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும் அன்றாட வீட்டுப் பணிகளையும் அலுவலகப் பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
இன்றைய பெண்கள் பல்வேறு சூழல்களில் பணிபுரிந்து வருகின்றனர். மாதவிலக்கு நாளில் ஓய்வே இல்லை. இந்நாட்களில் தலைக்கு குளிக்கவே கூடாது என மொத்தமாக சொல்ல முடியாது.. ஒவ்வொரு பெண்ணின் உடல் சூழலும் மாறும். உடல் சூட்டில் இருந்து தலைக்கு குளிக்கும் போது தும்மல், மூக்கடைப்பு, சளி போன்ற தொந்தரவுகள் வரலாம்.
இதன் காரணமாகவே அந்த காலத்தில் மாதவிலக்கு நேரத்தில் பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் உடற்சூடு என்பது பெண்களுக்கு பெண்கள் மாறுபடும். அவ்வாறு பிரச்னைகள் உள்ள பெண்கள் தலைக்கு குளிப்பதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்கள் தங்கள் உடல் தன்மைக்கு ஏற்ப குளிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.
மாதவிலக்கின் முதல் மூன்று நாட்கள் பெண்களுக்கு ஓய்வு என்பது அவசியம். இந்த நாட்களில் உதிரப்போக்குக் காரணமாக உடல் மற்றும் மனதளவில் சில சிரமங்களை எதிர்கொள்வர். ஆனால், இன்றைய நடைமுறையில் பணிக்குச் செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதால் ஓய்வு என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகிவிட்டது.
இந்த நாட்களில் ஆரோக்கியமான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். இந்த நாட்களில் உடலானது வழக்கத்தைவிட அதிக சூடாக இருக்கும். தலைக்குக் குளிப்பதால் சிலருக்குச் சளி பிடிக்கலாம். கருப்பை, நரம்புகள் பாதிக்கப்படும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை.
இந்த நாட்களில் நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்றிக்கொள்ளுதல், மனதளவில் தயாராக இருத்தல் போன்ற நடைமுறை விஷயங்களைப் பின்பற்ற வேண்டும். தன் சுத்தம், சுகாதாரமான உணவு, நிறை தண்ணீர், இரும்புச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் அருந்தும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த நாட்களிலாவது அவசியம் பருக வேண்டும்.