யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழங்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாணவியின் படுகொலை குற்றச்சாட்டு தொடர்பில் சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனையும் தலா 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.
ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில், உயிர் பிரியும் வரை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், இரண்டு சந்தேக நபர்கள் அரசாங்க சாட்சியாளராக மாறியமையால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளுக்காக ஆஜராகிய சட்டத்தரணிகள் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மரண தண்டனைக்கு மேலதிகமாக ஒரு குற்றவாளியினால் வித்தியாவின் குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இதற்கு மேலதிகமாக நான்காம் மற்றும் ஒன்பதாம் குற்றவாளிகள் 70000 ரூபாவும், ஏனைய குற்றவாளிகள் 40000 ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
அதனை செலுத்த தவறினால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 வருட கடூழிய சிறைத்தண்டனை மேலும் அதிகரிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று மரணதண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்ட போது நீதிமன்றத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. தீர்ப்பைக் கேட்டதும், குற்றவாளிகளின் உறவினர்கள் ஓலமிட்டு அழுததாகவும் கூறப்படுகின்றது.