வித்தியா கொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேருக்கு (27.09.2017) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பினை வழங்கிய மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம், குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கு முயன்ற மூவர் தொடர்பிலான தகவல்களை வௌிப்படுத்தினர்.
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கில் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கொலையின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை தப்ப வைக்க முயற்சித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான பல விடயங்கள், இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் வாசிக்கப்பட்ட அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டது.
அதற்கமைய , கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி சுவிஸ் குமார் வேலணை பகுதியில் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, கட்டிவைக்கப்பட்டிருந்த போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அங்கு சென்று சுவிஸ் குமாரை தப்பிச்செல்ல விட்டமை உறுதியானது.
இது தொடர்பில் சுவிஸ் குமார் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த பகுதியில் 2 மணித்தியாலங்கள் வரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா நின்றதாகவும் சுவிஸ் குமார் சாட்சியமளித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் விஜயகலா, சுவிஸ் குமாரிடம் அவர் சசி என்பவரின் சகோதரரா என கேட்டுவிட்டே அவருக்கு இந்த உதவியைச் செய்திருக்கிறார்.
சசி என்பவர் வழக்கில் கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் எனவும், பாரதூரமான இந்த வழக்கில் அவரின் பெயரைக் கூறி சுவிஸ் குமாரை இராஜாங்க அமைச்சர் விஜயகலா காப்பாற்றியுள்ளமையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுவிஸ் குமாரை கட்டவிழ்த்து விடுமாறு கூறிய இராஜாங்க அமைச்சர், அவரை சட்டத்தின் பிடியில் கையளிக்கவோ அல்லது பொலிஸாருக்கு அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வரவில்லை எனவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
09 ஆவது எதிரியான சுவிஸ் குமாருக்கு எதிராக எவ்வித முறைப்பாடுகளும் இல்லை என உப பொலிஸ் பரிசோதகர் ஶ்ரீகஜன் தெரிவித்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளையை மறுத்தமை சட்டத்திற்கு முரணான செயற்பாடு எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 09 ஆவது எதிரியான சுவிஸ் குமாருக்கு எதிராக எவ்வித முறைப்பாடுகளும் தனது பொலிஸ் நிலையத்தில் இல்லை என தெரிவித்து, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளையை செயற்படுத்துவதற்கு ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி குவின்டஸ் பெரேரா மறுப்புத் தெரிவித்தமையும் சட்டத்திற்கு முரணான விடயம் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊர்காவற்துறை பிரதேசத்தில் நடைபெற்ற குற்றச்செயல் இதுவென தெரிந்தும், 09 ஆவது எதிரியின் சகோதரரான 04 ஆவது எதிரியைக் கைது செய்திருந்த நிலையில், 09 ஆவது எதிரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள குவின்டஸ் பெரேரா மறுப்பு தெரிவித்தமையும் சட்டத்திற்கு முரணான விடயம் என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் புங்குடுதீவில் உள்ள வித்தியாவின் வீட்டிற்கு சென்றிருந்த நியூஸ்பெஸ்ட் குழுவினர்
வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்து
வித்தியா படுகொலைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் மக்கள் கருத்து
பூபாலசிங்கம் இந்திரகுமார் விடுவிக்கப்பட்ட போதும் பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.