புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மரணதண்டனைக் கைதிகள்மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தும்பறை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரியவருவதாவது,
னேற்று முந்தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதாய விளக்க தீர்ப்பாயத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நேற்று மாலை போகம்பர சிறைச்சாலையிலிருந்து தும்பறை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டபோதே சிறையிலிருந்த ஏனைய மரணதண்டனைக் கைதிகளால் குறித்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறைச்சாலையிலிருந்த மரண தண்டனைக் கைதிகள் இவர்கள் குறித்து ஏற்கனவே அறிந்துள்ளதாகவும், மாணவியைப் பலாத்காரப்படுத்தினீர்களா என்று கேட்டவாறே தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இந்த திடீர் தாக்குதலை சிறைச்சாலை அதிகாரிகள் பெருமுயற்சியெடுத்துத் தடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த ஏழு கைதிகளையும் சீ பிரிவு சிறையறையில் அடைத்துள்ளனர்.
பொதுவாக தும்பறை சிறைச்சாலையில், பாரிய குற்றச் செயல்களுக்காக மரண தண்டனை மற்றும் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 350 சிறைக்கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.