132 ஆண்டு வரலாறு கொண்ட மிகப்பெரிய கட்சி காங்கிரஸ்.
அந்த கட்சியை வீழ்த்தி முதல் முறையாக தனிக்கட்சி பா.ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது காங்கிரசுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
காங்கிரசில் இந்திரா, ராஜீவுக்கு பிறகு வலிமையான, செல்வாக்கு மிக்க தலைவர்கள் இல்லை. அவர்களைப் போல் மக்களை கவரும் ஆற்றல் சோனியா, ராகுல் இருவரிடமும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று காங்கிரசார் ஆதங்கப்படுகிறார்கள்.
இந்த சூழ்நிலையில்தான் மோடியின் தலைமையில் பா.ஜனதாவின் அரசியல் உச்சம் தொட்டது. மோடியின் வசீகரம், ஆவேச மான பேச்சுக்கள் மக்களை கவர்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வலிமையான தலைவரின் தலைமை இந்தியாவுக்கு வாய்த்துள்ளதாக நம்புகின்றனர்.
அந்த நம்பிக்கையில்தான் அடுத்தடுத்து வந்த அனைத்து தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றிவாகை சூடியது.
இந்தியாவில் மொத்தம் 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில் 13 மாநிலங்களில் பா.ஜனதா தனித்து ஆட்சி அமைத்துள்ளது. 5 மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மிசோரம், மேகாலயா, இமாச்சலபிரதேசம், பஞ்சாப், பாண்டிச்சேரி, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மிசோரம், மேகாலயா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடக்கிறது. இதில் கர்நாடகம் பெரிய மாநிலம். 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 150 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்து பா.ஜனதா தேர்தல் பிரசார வியூகத்தை வகுத்து செயலாற்றி வருகிறது.
அந்த மாநிலத்தில் மிகப்பெரிய சமூகமான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கிறது. இந்த மாநிலங்களை கைப்பற்றுவதன் மூலம் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை கொண்டுவர பா.ஜனதா கங்கணம் கட்டி வேலை செய்கிறது.
இக்கட்டான நிலைக்கு ஆளாகி இருக்கும் காங்கிரசுக்கு பிரியங்கா தலைமை ஏற்றால் வீழ்ச்சியில் இருந்து காங்கிரசை காப்பாற்ற முடியும் என்று தொண்டர்கள் நம்புகிறார்கள்.
இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று இன்றளவும் அவரை நினைத்து பார்க்கிறார்கள்.
பிரியங்காவும் பாட்டியின் சாயலை ஒட்டி இருப்பதால் மோடிக்கு ஈடுகொடுத்து களத்தில் தாக்கு பிடிப்பார் என்று கருதுகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரஸ் இருக்கிறது. எனவே இந்த தேர்தல் களத்தில் பிரியங்காவை களம் இறக்கி பார்க்க காங்கிரஸ் முடிவு செய்து இருக்கிறது.
இதுவரை கட்சி பொறுப்புக்கு வராத பிரியங்கா உத்தரபிரதேச தேர்தலில் தனது தம்பி ராகுலுக்கும், தாயார் சோனியாவுக்கும் ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார்.
மோடிக்கு ராகுல் கொடுக்கும் பதிலடியை விட பிரியங்கா அவ்வப்போது கொடுக்கும் பதிலடி ஓரளவு எடுபட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே கர்நாடக தேர்தலில் பிரியங்கா தலைமை ஏற்று பிரசாரத்தில் ஈடுபட்டால் ‘கை’க்கு கை கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.
கட்சியினரின் வற்புறுத்தலால் பிரியங்காவும் முழு நேர அரசியலுக்கு வர சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் மோடியா? பிரியங்காவா? என்று நடைபெற போகும் போட்டியின் முடிவை பொறுத்தே காங்கிரசின் எதிர்காலம் அமையும்.
பிரியங்காவுக்கு மக்கள் கை கொடுத்தால் அடுத்து மோடியும் வலிமையான போட்டியாளருடன் மோத வேண்டிய சூழ்நிலை உருவாகும்.