எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வித்தியா பிறந்தார். வித்தியாவின் சகோதரியான அக்கா 1991 ஆம் ஆண்டும் சகோதரனான அண்ணா 1993 ஆம் ஆண்டும் பிறந்தனர்.
வித்தியா துணுக்காய் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். தரம் 05 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் திறமையான சித்தியும் பெற்றார்.
புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் கிடைத்த அன்றைய தினம் வித்தியாவுடன் படிக்கும் மாணவனுக்கு வித்தியாவை விட ஒரு புள்ளிகள் அதிகமாகக் கிடைத்தமையால், கரும்பலகை துடைக்கும் துடைப்பானினால் வித்தியாவின் முகத்தில் வீசி எறிந்தான்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர் வித்தியாவின் கண் பார்வை குறைந்ததுடன் கண்ணில் வலியும் ஏற்பட்டது.நாட்டில் யுத்தம் மும்முரமாக இடம்பெற்ற காலம். பல்வேறு கஷ்டத்தின் மத்தியில் வித்தியாவை கொழும்புக்கு அழைத்துச் சென்றேன். அங்கு உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து, கொழும்பு சுலைமான் தனியார் வைத்தியசாலையில் வித்தியாவிற்கு கண் சத்திரசிகிச்சை மேற்கொண்டோம்.
வித்தியாவிற்கு கண் சிகிச்சை முடிந்த பின்னர் கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் சேர்ப்பதற்கு முயற்சி செய்த போது பழைய பாடசாலையை விட்டு வெளியேறும் அனுமதிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் தனியார் வகுப்புகளுக்கு மாத்திரமே சென்று வித்தியா கல்வி கற்றார்.
நான்கு வருடத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில், சொந்த ஊரான புங்குடுதீவுக்கு வந்தோம். இதன்போது வித்தியாவின் தந்தைக்கு ஷெல் பட்டு காயமடைந்தார். இதனையடுத்து அவர் எங்கும் செல்ல முடியாத அளவுக்கு சுகயீனமுற்றார்.
நான்கு வருடங்கள் வித்தியா பாடசாலைக்கு சென்று கல்வி கற்காமையினால் புங்குடுதீவிலுள்ள பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்டது. எமது தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு இணங்க பாடசாலை அதிபர் வித்தியாவிற்கு பரீட்சை வைத்தார்.
இந்தப் பரீட்சையில் வித்தியாவிற்கு அதிகளவிலான புள்ளிகள் கிடைத்தன. பாடசாலைக்கு அனுமதியும் கிடைத்தது.
அதன்பின்னர் மிகவும் சுறுசுறுப்புடன் நன்றாக கல்வி கற்றுவந்த வித்தியா, சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார்.தான் ஒரு சிறந்த ஊடகவியலாளராக வருவதற்கே வித்தியா ஆசைப்பட்டார். ஊடகத்துறையை இந்தியாவில் சென்று கற்பதற்காக ஹிந்தி மொழியையும் கற்றார். அத்துடன் உயர் தரத்திற்கும் ஊடகத்துறை கல்வியையே வித்தியா தேர்ந்தெடுத்தார்.
உயர்தரம் படித்துக்கொண்டிருந்த முதலாம் ஆண்டில் தான் வித்தியாவிற்கு இந்த கொடூர அனர்த்தம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்திற்கு முதல் நாள் தனக்கு புதிதாக பாடசாலை சீருடை வேண்டும் எனக் கேட்டாள்.
அவளின் கோரிக்கைக்கு இணங்க பாடசாலை சீருடையை தைப்பதற்காக கொடுத்திருந்தேன்.பாடசாலை சீருடையை எடுப்பதற்காக சென்ற வித்தியாவை வானில் இருந்த கொலைகாரக் கும்பல் அவதானித்துக் கொண்டிருந்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற அன்று வித்தியா பாடசாலைக்கு தயாராகுவதற்கு தாமதமாகியது. இதனால் வீட்டிற்கு வெளியே வந்து தேனீரைக் குடிக்குமாறு வித்தியாவிடம் கொடுத்தேன்.
பாடசாலை சென்ற வித்தியா மாலை ஆகியும் வீடு திரும்பவில்லை. பாடசாலை வரை தேடிச் சென்று பார்த்தும், வித்தியாவைக் காணவில்லை. குறிகட்டுவான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். அதனை பொலிஸார் ஏற்க மறுத்தனர்.
பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். எங்களை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. மகள் குமரி தானே. எங்கையாவது சென்றிருப்பாள். இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் அவளின் காதலனுடன் வீடு திரும்பி வருவாள் என்று ஊர்காவற்துறை பொலிஸார் அவதூறான வார்த்தைகள் பேசினார்கள்.
இரவாகியதால் வீடு வந்தோம். மறுநாள் காலை எனது மகனுடன் வித்தியாவைத் தேட ஆரம்பித்தோம். சந்தியில் கடையில் உள்ளவர்கள் வித்தியா படசாலைக்கு செல்வதைக் காணவில்லை என்று கூறினார்கள். பின்னர் வீட்டில் இருந்து சந்திவரையிலுள்ள பகுதிகளில் தேட ஆரம்பித்தோம்.
வித்தியா ‘குட்டி’ என்று நாய் வளர்த்தாள். அதுவும் எம்முடன் வந்து தேட ஆரம்பித்தது. அந்த நாய் வித்தியாவின் சப்பாத்து ஒன்றைக் கௌவிக் கொண்டு வந்து எனது மகனின் கால் மீது வைத்து விட்டு மீண்டும் ஓடிச் சென்றது. அவனும் நாயின் பின்னர் ஓடிச் சென்ற பின்னர் அங்கு வித்தியாவைக் கண்டு சத்தமிட்டான். அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தான் எனது மகன்.
அன்று தொடக்கம் வித்தியாவை நினைவுபடுத்தும் போது, மகன் மயக்கமுற்று விழுவது வழமையாகியது. பின்னரே மகனை வெளிநாட்டிற்கு அனுப்பினோம்.
வித்தியாவைக் கொலை செய்தவர்களும் வித்தியாவின் உடல் வீட்டிற்கு கொண்டு வரும் முன்னரும் வந்திருந்தார்கள்.
இவர்கள் தான் கொலையாளிகள் என நாங்கள் நினைக்கவில்லை. இவர்கள் மகன் வளர்த்த ஆடு முன் சென்ற போது, ஆடும் அவர்களை முட்டியது.
வித்தியாவின் அண்ணாவிடம் கொலையாளிகள் ஆறுதல் கூறினார்கள். சுவிஸ்குமார் என்பவரை எங்களுக்குத் தெரியாது மரணச்சடங்கில் அவரும் வந்திருந்தார்.வித்தியா உயிரிழந்த நாள் முதல் இன்றுவரை அவளின் அப்பா வாய் பேச முடியாத நிலையில் உள்ளார்.
ஊர்காவற்துறைப் பொலிஸார் இதனை முறையாக விசாரணை செய்யவில்லை. மக்களின் ஆர்ப்பாட்டத்தினாலே இந்த வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுப் பிரிவில் இருந்து நிஷாந்த சில்வா ரஹீம் ஆகியோர் அடிக்கடி வந்து விசாரணையை மேற்கொண்டனர். பணத்திற்கு அடிமையாகவில்லை அவர்கள். எல்லா இடமும் அலைந்து திரிந்து சாட்சியங்கள் தேடினார்கள். 2 வருடங்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். நீதி நிலைநாட்டப்பட்டமைக்காக 3 நீதிபதிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். நல்ல தீர்ப்பு அளித்துள்ளார்கள்.
2 வருடங்களாக சிரமப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
மகளுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிக்கின்றோம். குற்றப்புலனாய்வுப் பிரிவில் 15 பேர் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்கள் போன்று வேறு அதிகாரிகள் இருந்தால் அனைத்து குற்றங்களும் மிக இலகுவாகக் கண்டுபிடிக்கலாம்.
பொலிஸார் அசமந்தமாக இருந்த போது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மிகச் சிரமத்துடன் செயற்பட்டனர்.எனது மகளைக் கொலை செய்த கொலையாளிகளிடம் இருந்து 5 சதம் கூட வேண்டாம். ஏனென்றால் எனது மகள் எனக்கு மீண்டும் கிடைக்கமாட்டாள்.
எனக்கு நடந்தது போன்று வேறொரு தாய்க்கும் நடக்கக்கூடாது என்று கடவுளைப் பிரார்த்திக்கின்றேன். நான் படும் துன்பம் வேறொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது என்றும் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயார் மேலும் தெரிவித்துள்ளார் .