யாழ். சிறைச்சாலைக்கு கொண்டு சென்ற உணவுப் பொதியில் போதைப்பொருள் சிக்கியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்றவர் யாழ்ப்பாணச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் யாழ். சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது.
விளக்கமறியலில் இருக்கும் கைதியொருவரைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் போத்தல் ஒன்றினுள் கோழிக்கறி கொண்டு சென்றுள்ளார்.
குறித்த கோழிக் கறி மீது சந்தேகம் கொண்ட சிறைக்காவலர்கள் அதனை பரிசோதித்துள்ளனர். அப்போது கோழிக்கறியின் குழம்பினுள்ளே சிறு சிறு பொலித்தீன் பைககள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் அடங்கிய சிறிய பொதிகள் பல அதில் காணப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கோழிக்கறி கொண்டு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த நபரிடமிருந்து 02 கிராம் 500 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது