ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகளுக்கான பிரகடனத்திற்கு அமைய சிறுவர்களின் நல் வளர்ச்சிக்கு எதிராக அமையும் அனைத்து தடைகளையும் முற்றாக அகற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பும் கடமையுமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அதனை நிறைவேற்ற ஒன்று திரட்டப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தை வென்றெடுப்பதற்கு இன்றைய தினம் அனுட்டிக்கப்படும் சர்வதேச சிறுவர் தினம் மிகப்பொருத்தமானதாக அமையும் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
இவ்வாண்டின் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தாய் தந்தை முதியோரின் அன்பு பாசப்பிணைப்பின் ஊடாக சிறுவர்களை அவர்களது அதியசம் மிக்க உலகத்திற்கு கொண்டு செல்வோம் என்ற தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் உலக சிறுவர் தின தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
கபடமற்ற தன்மையினதும் அழகினதும் உலக சின்னமாக பிள்ளைகள் திகழ்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, உலகில் எந்த தேசத்திலாவது எந்த இனத்தை அல்லது எந்த மதத்தை தழுவிப் பிறந்த போதிலும் மானிட வர்க்கத்தின் எதிர்காலத் தலைவிதியின் ஆக்குவிப்பாளர்களாக சிறுவர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.