மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஆற்றின் வழியாக படகில் செல்லும் பலர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். மியான்மரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடிகளின்மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி ரோஹிங்கியா போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது.
மியான்மரில் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்து சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்
அங்கிருந்து வெளியேறி அண்டை நாடான வங்காளதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதுதவிர, இந்தியா, இலங்கை உள்ளிட்ட புறநாடுகளிலும் அவர்கள் புகலிடம் தேடி சென்றுள்ளனர்.
அவ்வகையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் புகலிடம் தேடி படகில் வந்து இலங்கை நாட்டின் வடக்கில் உள்ள கடல் பகுதியில் தத்தளித்த சிலரை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டனர். 16 குழந்தைகள் உள்பட அவர்கள் 31 பேரும் இலங்கை தலைநகரான கொழும்புவின் புறநகர் பகுதியில் ஐ.நா.சபையின் கண்காணிப்பில் தங்க வைக்க்கட்டிருந்தனர்
இந்நிலையில், இலங்கையில் உள்ள மதவாத இயக்கமான சிங்கள தேசியப் படையை சேர்ந்த புத்த மதத்தினர் சிலர் அகதிகளாக வந்து அடைக்கலம் அடைந்துள்ள ரோஹிங்கியா மக்களின் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளான அவர்களை உடனடியாக நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற அடிக்குறிப்புடன் அவர்களை தாக்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி இலங்கையின் வடபகுதியில் உள்ள பூஸ்ஸா என்ற இடத்துக்கு அந்த அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். அகதிகளாக வந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பிய பின்னர் இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை கொழும்பு போலீசார் முன்னர் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிங்கள தேசியப் படையை சேர்ந்த புத்த சாமியாரான அக்மீமனா தயாரத்னா என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதன்படி, இன்று காவல் நிலையத்தில் ஆஜரான அக்மீமனா தயாரத்னா மற்றும் இன்னொருவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் 8-ம் தேதி காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.