தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான அதர்வா நடிப்பில் தற்போது, `செம போத ஆகாதே’, `ருக்குமணி வண்டி வருது’, `இமைக்கா நொடிகள்’, `ஒத்தைக்கு ஒத்த’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் `செம போத ஆகாதே’ படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் அதர்வாவின் அறிமுக படமான `பானா காத்தாடி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
`செம போத ஆகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடிக்கின்றனர். இவர்களுடன் அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் இருந்து ஏற்கனவே டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்திற்கான ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதன்படி படத்தை வருகிற நவம்பர் மாதம் வெளியிட இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் வெளியிடுகிறது.
அதற்கு முன்னதாக தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் விஜய்யின் `மெர்சல்’ படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.