தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் மனிதனின் ஆரோக்கியத்துக்கு உதவும். ஆனால், அவற்றின் முடிவுகள் முதலில் வெளியாகும்போது அதிர்ச்சியையே ஏற்படுத்தும். அப்படி ஓர் அதிர்ச்சியைத்தான் சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. நம் வீட்டில் அதிக அளவிலான கிருமிகளைச் சுமந்துகொண்டிருக்கும் பொருள் எது தெரியுமா? பாத்திரம் கழுவ நாம் பயன்படுத்தும் ஸ்பாஞ்சுகள் தானாம்.
‘சயின்ட்டிபிக் ரிப்போர்ட்ஸ்’ என்னும் பத்திரிகையில் ஜெர்மன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் தான் ஸ்பாஞ்சுகள் மீது இப்படியொரு குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கின்றன. பயன்படுத்தப்பட்ட 14 ஸ்பாஞ்சுகளை இந்த ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை மைக்ராஸ்கோப் வழியாகப் பார்த்தபோது 360-க்கும் அதிகமான பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஈரம் அதிகமிருக்கும் இடங்களில் பாக்டீரியாக்கள் இருப்பது சகஜம்தானே பின் ஏன் இந்த அதிர்ச்சி காரணம், ஸ்பாஞ்சில் இருந்த 360 பாக்டீரியாக்களில் 10-ல் 5 பாக்டீரியாக்கள் கெடுதல் அதிகமாக தரும் இனத்தை சேர்ந்த குரூப்- 2 வகையைச் சார்ந்தவை. அவற்றால் மனிதர்களுக்கு ஆபத்து நிச்சயம் என்பதுதான் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
சிலர் பாக்டீரியாவை அழிக்கிறேன் பேர்வழி என்று ஸ்பாஞ்சை சூடுபடுத்தியும் மைக்ரோவேவ் ஓவனில் வைப்பதையும் செய்கிறார்கள். இது நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி செய்வதன் மூலமாக ஈரத்தைக் குறைக்கலாம் என்று அவர்கள் நினைப்பதுண்டு. ஆனால், அது பிரச்சினையை இன்னும் அதிகப்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். அது, இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுமாம்.
அகலமான சர்பேஸ் ஏரியா, எப்போதும் ஈரம் மற்றும் சமையலறை கழிவுகளுடனே இருப்பது என பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சரியான இடத்தை ஸ்பாஞ்சுகள் வழங்குகின்றன. அதனால்தான் அது அதிகம் தீங்கு தருகிறது. இதற்கு என்னதான் தீர்வு? வாரத்துக்கு ஒருமுறை ஸ்பாஞ்சை மாற்றுவதுதான் ஒரே வழி என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்போதுதான் அதன் தாக்கம் குறைவாக இருக்கும்.