தர்மபுரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டிக்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தார்.
அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர் தமிழகம் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். மேலும் அவர் ஊட்டி தனியார் பள்ளியில் படிக்கும் தனது பேரக்குழந்தைகளை பார்க்க வந்திருப்பதாக கூறப்பட்டது.
காலையில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கான்வாய் அமைக்கப்பட்டது. அப்போது காருக்கு வந்த அவரிடம், நிருபர்கள் சிறையில் இருந்த சசிகலா பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், சென்னையில் இருப்பதை தவிர்க்க தான், இந்த ஊட்டி பயணமா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் பதில் ஏதும் கூறாமல் சென்று விட்டார். அவரது ஆதரவாளர்கள் கூறும் போது, பன்னீர் செல்வத்தின், திடீர் ஊட்டி பயணம் எங்களுக்கே ஆச்சர்யமாக உள்ளது. அவரது பேரன், பேத்தி, ஊட்டி பள்ளியில் படிக்கின்றனர் என்ற விபரமே தற்போது தான் தெரிகிறது என்றனர். துணை முதல்-அமைச்சருடன் அர்ஜுனன் எம்.பி., மாநில விவசாய பிரிவு துணை செயலர் பாரதியார் மற்றும் சிலர் மட்டுமே இருந்தனர்.
தொடர்ந்து பேரக் குழந்தைகளை பார்த்து விட்டு மதியம் 1.30 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் ஊட்டியில் இருந்து கோவை வழியாக பெரியகுளத்துக்கு புறப்பட்டு சென்றார்.
சசிகலா பரோலில் வந்துள்ளதால் சென்னையில் இருப்பதை தவிர்க்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், ஊட்டி தமிழகம் மாளிகையில் தங்கியுள்ளார். அவர் இன்று ஊட்டியில் நடக்க உள்ள ஆவின் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.