மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லடி உப்போடை பகுதியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து சுமார் 2 கோடி பெறுமதியான தங்க நகைகளையும் வெளிநாட்டு பணத்தினையும் கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்த நால்வரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வி ளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எம்.ஐ.எம்.ரிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இந்தக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தன்று வீட்டுரிமையாளர்கள் வெளியில் சென்றிருந்தனர். பின்பு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் வீட்டினுள் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டகமும் காணாமல் போயிருந்தது.
இதனை அடுத்து வீட்டுரிமையாளர்கள் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
வீட்டு உரிமையாளர் வழங்கிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அங்கு நகை வேலை செய்த நான்கு பேரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின் பேரில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பொலிஸ் பிரிவிலுள்ள தெனியாய காட்டுப் பகுதியிலிருந்து அந்த நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த இரும்பு பெட்டகத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதிலிருந்து 125 பவுண் தங்க நகைகள் சுமார் ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் வெளிநாட்டு நாணயம் என்பவற்றையும் குறித்த சந்தேக நபர்கள் இதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த வீட்டில் நகை வேலை செய்து வந்த திருகோணமலையைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்..
குறித்த சம்பவமானது, திரைப்படப் பாணியில் வீட்டின் கதவை உடைத்து சந்தேகம் ஏற்படாதவாறு வீட்டினுள்ளும் வெளிப் பகுதியிலும் அதிகளவிலான மிளகாய்த் தூள்களைத் தூவி அங்கிருந்த நாயின் கவனத்தை திசை திருப்பி இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.