பெற்றோரின் பாசம் கிடைக்காத நிலையில் தனது அம்மம்மாவுடன் வாழ்ந்துவந்த யுவதியின் சடலம் மட்டக்களப்பில் குடிசை ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் ஐயன்கேணி கிராமத்தில், 17 வயது நிரம்பிய கணேசமூர்த்தி கிருஷ்ரெலா என்ற குறித்த யுவதி, தனது அம்மம்மாவுடன் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு ஏறாவூர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தாயை விட்டு தந்தை பிரிந்து சென்று வேறு திருமணம் முடித்துள்ள நிலையில், தாய் தலைநகரில் ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்து ஜீவனோபாயத்தைக் கவனித்துக் கொள்வதாகவும் யுவதி அம்மம்மாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறுவயதிலிருந்தே இந்த யுவதி பெற்றோர் மற்றும் உறவினர் பாசமின்றி அம்மம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர் எனவும், மன விரக்தியுற்றிருந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.