ராகு பகவானுக்கு உரிய தலம் என்றதும் தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு நாகேசுவரம் கோவில்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அதேபோன்ற ராகுதோஷ நிவர்த்தி தரும் கோவில் நெல்லை மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில் பெருமாள் மேலரத வீதியில் அமைந்துள்ளது.
இங்குள்ள ‘பகவதி அம்மன்’ கோவிலில்தான் திருநாகேஸ்வரத்தில் உள்ளதுபோன்று நாகவள்ளி, நாக கன்னி தேவி சமேதராக காட்சியளிக்கிறார், ராகு பகவான். திருநாகேஸ்வவரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சக்திவாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாகிட சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் பாலை, நோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் அருந்துகின்றனர்.
ராகு பகவானுக்கு செய்யப்படும் பால் முதலிய அபிஷேகங்களையும், எந்தவித வேறுபாடும் இல்லாமல் பக்தர்கள் வரிசையில் நின்று தாங்களாகவே செய்கின்றனர். இது மட்டுமா? ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்வது. கற்பூர ஆராதனை காட்டுவது ஆகியவற்றையும் பக்தர்களே செய்கின்றனர். அவரவர்கள் கொண்டு வந்த பிரசாதத்தை அவரவர்களே ராகு பகவானுக்கு படைத்து பின்னர் தங்கள் கைகளாலேயே பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள பகவதி அம்மன், கருமாரி அம்மன், ராகு பகவான், சுடலை மாடசாமி ஆகியோரின் சிரசுகளில் சிவப்பு கயிறு வைக்கப்பட்டுள்ளது. இந்த கயிறு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி தோறும் மாற்றப்படுகிறது. நாற்பத்தியெட்டு நாட்கள் அம்மன் சிரசில் வைக்கப்பட்ட பின்னர் காவல் தெய்வமான சுடலை மாடசாமி சிரசில் வைக்கப்பட்டு பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் இந்த கயிறை கட்டிக்கொள்கின்றனர். துர் தேவதைகளால் ஏற்படும் பயம், விபத்து, நோய் நொடிகள் ஏற்படாமல் இந்த கயிறு காப்பாற்றும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ராகு பகவானுக்கு உரிய அதிதேவதையான, துர்க்கையின் அம்சமான கருமாரி அம்மன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் விரைவாக தோஷங்கள் நிவர்த்தியாகும் என்கிறார்கள். எனவே இத்தலத்திற்கு வந்து ராகு பகவானை வழிபட்டால் திருநாகேசுவரம் சென்று ராகு பகவானை வழிபட்ட பலனை அடையலாம் என்று சொல்கிறார்கள். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி நன்மை கிடைக்க ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
ராகு பெயர்ச்சி விழாவையொட்டி இக்கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. ராகு தோஷத்தால் பாதிக்கப்படுகிறவர்கள் மட்டுமல்லாது அனைவரும் ஒருமுறை இத்தலத்திற்கு வந்து இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வரும் பகவதியம்மன், கருமாரியம்மன், ராகு பகவானை ஒரு முறை தரிசித்து செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்பது மட்டும் நிச்சயம்.