குடிகார கணவன் ஆதரவு தராத நிலையில் நோய் வாய்ப்பட்டுள்ள தனது மகனை காப்பாற்ற பெண் காவலர் ஒருவர் போராடி வருகிறார்.
தமிழ்நாட்டின் சேலத்தை சேர்ந்தவர் சுதா (30), ஆயுதப்படை பெண் காவலராக உள்ளார். இவர் கணவர் ரமேஷ் (33) ஜவுளி கடையில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகளும், சஞ்சய் (6) என்ற மகனும் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய ரமேஷ், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காத நிலையில் சுதாவின் வருமானத்தில் தான் குடும்பம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சிறுவன் சஞ்சய் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
நோய் தாக்கம் அதிகரித்ததால் சஞ்சயின் கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதன் தாக்கம் மூளையை பாதித்து சுயநினைவை இழந்துள்ளான்.
செயற்கை சுவாசம் அளிக்க 35 ஆயிரம் ரூபாய், அவசர சிகிச்சை பிரிவில் 15 ஆயிரம், மருந்துக்கு 30 ஆயிரம் என தினமும் சராசரியாக 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்.
சுதாவுக்கு காப்பீடு மூலம் அறுவை சிகிச்சைக்கான பணம் மட்டுமே கிடைத்தது. கடந்த மூன்று நாட்களாக தனது நகையை விற்றும் கடன் பெற்றும் நிலைமையை சுதா சமாளித்து வருகிறார்.
சுதா கூறுகையில், என் கணவர் உதவ மறுத்து விட்டார். தமிழக முதல்வரும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் தான் என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.