தொழிலாளி ஒருவரின் தாடையில் குத்தி வாய் வழியாக வெளியே வந்த இரும்பு கம்பி ஒன்றை மருத்துவர்கள் வெற்றிகரமாக சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
ஹோமகமை வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் தம்மிக்க விக்ரமசேகர தலைமையிலான மருத்துவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் தொழிலாளி ஒருவர் கொங்கிரீட் போட்டுக்கொண்டு இருந்த நிலையில் மாடியில் இருந்து கீழே இறங்க முயற்சித்த போது கால் தவறி விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொங்கிரீட் கம்பி தாடையில் குத்தி வாய் வழியாக வெளியில் வந்துள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கொங்கிரீட் கம்பியை வெட்டியுள்ளதுடன் மீதமிருந்த கம்பியுடன் அவரை ஹோமகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஒன்றரை மணிநேர சத்திர சிகிச்சையின் பின் கம்பி அகற்றப்பட்டுள்ளது. விசேட மருத்துவ நிபுணர் தம்பிக்க விக்ரமசேகர தலைமையிலான சானக்க ராஜபக்ச, காவிந்த நாகொடவித்தான உள்ளிட்டோர் இந்த சிகிச்சையில் பங்கேற்றுள்ளனர்.
கம்பி அகற்றப்பட்ட நிலையில் விபத்துக்கு உள்ளானவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக மருத்துவர் விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.