மனிதர்களுக்கு முத்தான மூன்று பருவங்கள் உண்டு. அவை 1) குழந்தைப் பருவம், 2) இளமைப்பருவம், 3) முதுமைப்பருவம். இவற்றில் இளமைப்பருவம் என்பது சுயமாக இயங்கும் ஆற்றல் உள்ள, அபார சக்திமிக்க, அழகான பருவமாக அமைந்திருக்கிறது. மற்ற இரண்டு பருவங்களான குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பிறரைச் சார்ந்திருக்கிறது. முதியோர்கள் ஒருவகையில் குழந்தைகளைப் போன்றவர்கள் என்று இறைவசனம் நயமாக எடுத்துரைக்கிறது.
‘நாம் எவரையும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகின்றோம். (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?’ (திருக்குர்ஆன் 36:68)
மனிதன் குழந்தையாகப் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சியை அடைகின்றான். ஒரு குறிப்பிட்ட வயோதிகப் பருவத்தை அடைந்த பிறகு, குழந்தையைப் போன்றே நலிந்த நிலைக்கு தள்ளப்படுகின்றான். நடையில், பார்வையில், பேச்சில், செயலில் ஒவ்வொன்றிலும் முதியவர்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள். இத்தகைய உடல் மாற்றத்தை இறைவன் திருக்குர்ஆனில் பதிவு செய்துள்ளதை காண்போம்.
‘அல்லாஹ் உங்களை (ஆரம்பத்தில்) பலவீனமான நிலைமையில் உற்பத்தி செய்கிறான். அந்தப் பலவீனத்திற்குப் பின்னர் அவனே (வாலிப) பலத்தையும் கொடுக் கிறான். அந்த பலத்திற்குப் பின்னர் வயோதிகத்தையும், பலவீனத்தையும் கொடுக் கிறான். (இவ்வாறெல்லாம்) அவன், தான் விரும்பியவாறு உங்களை ஆக்குகிறான். அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 30:54)
‘உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 16:70)
முதியவர்களுக்கு ஏற்படும் உடல் மாற்றங்கள் மற்றும் ‘நரைமுடி’ ஏற்படுவது போன்றவை அனைத்தும் கண்ணியத்தின் அறிகுறிகளாகும். அவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதின் குறியீடுகளாகும்.
“நபி (ஸல்) அவர்கள் நரைமுடிகளைப் பிடுங்குவதைத் தடுத்தார்கள். மேலும் ‘அது இறைவிசுவாசியின் ஒளி’ என்றும் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அமர்பின்ஷுஜப் (ரலி) திர்மிதி)
“நம்மில் பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும், சிறியவர்கள் மீது இரக்கம் காட்டாதவரும் என் சமுதாயத்தைச் சார்ந்தவரல்லர்! என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : உப்பாதாபின் ஸாமித் (ரலி) அஹ்மது)
முதியோர்களை முதன்மைப்படுத்துவோம்
நன்மை – தீமை, லாப – நஷ்டம், இன்பம் – துன்பம், உயர்வு – தாழ்வு, வெற்றி – தோல்வி போன்ற வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் முதியோர்களிடம் முதன்மையாக ஆலோசனை கேட்க வேண்டும். முதியோர்கள் ஒரு சமூகத்தின் விலைமதிக்க முடியாத நட்சத்திரங்கள்: பழுத்த அனுபவங்களைக் கொண்டவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் முதல் மரியாதை கொடுக்க வேண்டும்.
‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல், (ரலி) அவர்களும், முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர்’.
‘அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் கொல்லப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அங்கு முஹய்யிஸா வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். இதன்பிறகு, கொல்லப்பட்டவரின் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல், முஹய்யிஸா, அவரது சகோதரர் ஹீவைய்யிஸாவும் நபியவர்களிடம் வருகை புரிந்தார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டே சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘பெரியவர்களைப் பேசவிடு, பெரியவர்களைப் பேசவிடு’ என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் ஸஹ்ல் (ரலி) வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர் (வாய் மூடி) மவுனமானார். பிறகு முஹய்யிஸாவும், ஹீவைய்யிஸாவும் நபியிடம் அப்துல்லாஹ் பின் ஸஹ்ல் (ரலி) கொல்லப்பட்டது குறித்து பேசினார்கள்’. (அறிவிப்பாளர் : ஸஹ்ல்பின் அபீ ஹஸ்மா (ரலி) புகாரி : 3173)
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் கனவில் பல் துலக்கும் குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாக என்னைக் கண்டேன். என்னிடம் இருவர் வந்தனர் இருவரில் ஒருவர் மற்றொருவரை விட பெரியவராக இருந்தார். எனவே, நான் அந்தக் குச்சியை சிறியவருக்கு வழங்கிவிட்டேன். அப்போது எனக்கு, ‘பெரியவரிடம் கொடுப்பீராக’ என்று கூறப்பட்டது. நானும் அவ்விருவரில் பெரியவருக்கு அதை வழங்கிவிட்டேன்”. (அறிவிப்பாளர் : இப்னுஉமர் (ரலி) நூல் : முஸ்லிம்)
‘ஒரு கூட்டத்துக்கு தலைமையேற்று தொழுகை நடத்தக் கூடியவர் யாரென்றால் அவர்களில் மிக அதிகமாக திருக்குர்ஆனை ஓதியவராக இருக்க வேண்டும். இந்தத் தகுதியில் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அடுத்து அவர் களில் மிக அதிகமான நபிமொழிகளை தெரிந்தவராக இருக்க வேண்டும். இதிலும் அனைவரும் சரி நிகரானவர்களாக இருந்தால், அவர்களில் முதன்முதலாக ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) புரிந்தவர் ஆவார். இதிலும் அவர்கள் அனைவரும் சரிசமமானவர்களாக இருந்தால், அவர்களில் வயதில் மூத்தவர் தலைமையேற்று தொழுகை நடத்தட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம்)
பெரியோர்களிடம் நடந்து கொள்ளும் முறை
ரபீஉ (ரஹ்) கூறுகிறார்: ‘எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நான் தண்ணீர் அருந்த துணியமாட்டேன்’ எனும் பணிவடக்கத்தை தெரிவிக்கிறார்.
மக்கா வெற்றியின்போது, நபித்தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களின் தந்தை தூய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு, நபி (ஸல்) அவர்களை தரிசிக்க வரும்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெரியவரைப் பார்த்து ‘நீங்கள் ஏன் என்னைப் பார்க்க வரவேண்டும்? நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்திருக்கலாமே. நாங்கள் வந்து உம்மை தரிசித்திருப்போமே’ என்று பணிவுடன் கூறினார்கள்.
இமாம் ஷாபிஈ (ரஹ்) கூறுவதாவது: ‘நான் எனது ஆசிரியப் பெருந்தகை இமாம் மாலிக் (ரஹ்) அவர்களுக்கு முன்பு அமர்ந்து புத்தகம் படிக்கும்போது, புத்தகத்தின் ஒரு பகுதியை திருப்பும்போது மெதுவாக திருப்புவேன். ஏனென்றால் அதன் சப்தத்தின் தொந்தரவு அவர்கள் கேட்கக்கூடாது என்பதற்காக’ என்கிறார்.
இஸ்லாமிய மார்க்கம் முதியோர்களை அதிகம் மதிக்கிறது. முதியோர்களின் நலனை அதிகம் பாதுகாக்கிறது. குழந்தைகளை விழுந்து விழுந்து, மனமுவந்து, ஆசை ஆசையாய் கவனிப்பது போன்று முதியோர்களையும் கவனிக்கும்படி தூண்டுகிறது.
‘குழந்தைகள் பெற்றோருக்குச் செய்யும் உரிமை போன்று, சிறியவர்கள் மீதும் பெரியோருக்குச் செய்யும் உரிமை கடமையாக உள்ளது’ என்பது நபிமொழியாகும்.
“ஒரு வாலிபர் வயது முதிர்ந்தவருக்கு மரியாதை செலுத்தும் போது, வாலிபர் வயோதிக பருவத்தை அடையும்போது, அவருக்கு மரியாதை செலுத்தும் ஒருவரை இறைவன் ஏற்படுத்தாமல் விடமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி)
“அபிவிருத்தி என்பது முதியோர்களுடன் உள்ளது என நபி (ஸல்) கூறினார்கள்” (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : ஹாகிம்) அந்திம காலத்தில் அனைத்தையும் இழந்து, பரிதாபமாக நிற்கும் முதியோருக்கு இளையோரும், அவரின் குடும்பத்தினரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்காமல் தமது இல்லத்திலேயே வைத்து கண்ணின் இமை போன்று அவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி போன்றவற்றிற்கு குழந்தைகள் மனதார பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு செய்தால், பெரியோர்களின் அபிவிருத்தியும், பிரார்த்தனையும் அவர் தம் குடும்பத்தாருக்கும் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.