புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஏழு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக போகம்பரை சிறைச்சாலையின் அத்தியட்சகர் பதிவுத்தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் மற்றும் நான்காம் இலக்க குற்றவாளியான மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மேன்முறையீடு செய்துள்ளார்.
யாழ். மேல்நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில் Trial at Bar நீதிபதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதன் பின்னர் உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமிற்கு குறித்த மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குற்றவாளிகளுக்கு Trial at Bar தீர்ப்பாயத்தினூடாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். மேல் நீதிமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்ட Trial at Bar தீர்ப்பாயத்தினூடாக குற்றவாளிகளுக்கு கடந்த மாதம் 27 ஆம் திகதி 30 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் கூடிய மரண தண்டனை விதிக்கப்பட்டது.