இராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டமையை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனால் ராஜபக்ஷ குடும்பத்துக்குள் முறுகல் நிலையை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பசில் ராஜபக்ஷ, அங்கு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதனை ஏற்றுக் கொண்டார்.
பசில் ராஜபக்ஷவின் கருத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பசிலின் கருத்து தன்னை நேரடியாக பாதிக்கும் விடயமாக உள்ளதென கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினர் எந்தவித போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என கோத்தபாய ராஜபக்ச நீண்ட காலமாக கூறி வருகின்றார்.
சாதாரண பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்படவில்லை. பசில் ராஜபக்சவின் அந்த கருத்தினால் தனது நிலைப்பாட்டிற்கு நேரடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
தான் யாழில் அவ்வாறான கருத்து வெளியிடவில்லை என பசில் ராஜபக்ச ஊடக அறிக்கை வெளியிட்டுள்ள போதிலும், பசில் உரையாற்றிய ஒளிப்பதிவு வெளியாகியமையால் அந்த தகவல் உறுதியாகியுள்ளது.
கோத்தபாய மற்றும் பசிலுக்கு இடையில் நீண்ட நாட்கள் காணப்பட்ட மோதல் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.