ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
கவுகாத்தியில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 118 ரன்னில் சுருண்டது. கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 27 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 25 ரன்னும் எடுத்தனர். பெரேன்டோர்ப் 4 விக்கெட்டும், ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹென்ரிக்ஸ் 46 பந்தில் 62 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), டிரெவிஸ்ஹெட் 34 பந்தில் 48 ரன்னும் (5 பவுண்டரி, 1சிக்சர்) எடுத்தனர். புவனேஸ்வர்குமார், பும்ரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.
இந்த தோல்விக்காக பேட்ஸ்மேன்களை கேப்டன் விராட்கோலி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பேட்டிங்கில் நாங்கள் போதுமான அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. மோசமான பேட்டிங்கால் தான் தோற்றோம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது தொடக்கத்தில் சவாலாக இருந்தது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் பெரென்டோர்ப் மிகவும் அபாரமாக பந்துவீசி எங்களுக்கு நெருக்கடியை கொடுத்துவிட்டார். அவர் நேர்த்தியாக பந்துவீசினார். எங்களது சரிவுக்கு அவரது சிறப்பான பந்துவீச்சு தான் காரணம்.
இவ்வாறு விராட்கோலி கூறினார்.
வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர் கூறியதாவது:-
எங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினோம். அபாரமான பந்து வீச்சால் இந்த வெற்றியை எளிதில் பெற்றோம். பெரென்டோர்ப், ஆடம் ஜம்பாவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய அனுபவம் இருந்ததால் ஹென்ரிக்சை முன்னதாக களம் அனுப்பினோம். அவரும் அதை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
கடைசி 20 ஓவர் ஆட்டம் ஐதராபாத்தில் நடப்பதால் ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும்.
இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் நடக்கிறது.