ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து பிரபலம் பெற்றது உலக கோப்பை கால்பந்து ஆகும். ஒலிம்பிக்கை போலவே இந்தப் போட்டியும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது.
2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பையில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
2018-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் ஜூன்- ஜூலை மாதங்களில் நடக்கிறது. 32 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ரஷியா நேரடியாக தகுதி பெற்றது. மற்ற 31 அணிகள் தகுதி சுற்று மூலம் முன்னேறும். தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா அணி பெருபுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் இன்றி ‘டிரா’ செய்ததால் நெருக்கடி ஏற்பட்டது. 2 முறை கோப்பையை வென்ற அந்த அணி ஈகுவாடார் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வென்றால்தான் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. தோற்றால் வெளியேற்றப்படும் நிலை இருந்தது.
குயிட்டா நகரில் நடந்த இந்த முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அர்ஜென்டினா உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
உலகின் சிறந்த கால்பந்து வீரரும், அந்த அணியின் கேப்டனுமான லியோஸ் மெஸ்சி அர்ஜென்டினாவின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 3 கோல்களையும் அவர்தான் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.
அர்ஜென்டினாவுடன் இணைந்து தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள உருகுவே, கொலம்பியா ஆகிய அணிகளும் தகுதி பெற்றன. 5 முறை கோப்பையை வென்ற பிரேசில் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தது. சிலி அணி உலக கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
ஐரோப்பிய கண்டத்தில் நடந்த தகுதி சுற்று மூலம் 1998-ம் ஆண்டு சாம்பியனான பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகியவை தகுதி பெற்றன. இதே போல் பனாமா புதுமுக அணியாக தகுதி பெற்றுள்ளது.
2018 உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற நாடுகள் விவரம்:-
ரஷியா (போட்டியை நடத் தும் நாடு), பிரேசில், ஈரான், ஐப்பான், மெக்சிகோ, பெல்ஜியம், தென் கொரியா, சவுதி அரேபியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நைஜிரியா, கோஸ்டாரிகா, போலந்து, எகிப்து, ஐஸ்லாந்து, செர்பியா, போர்ச்சுகல், பிரான்ஸ், உருகுவே, அர்ஜென்டினா, கொலம்பியா, பனாமா.
இதுவரை 23 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 9 நாடுகள் தகுதி பெற வேண்டும்.