பெங்களூரில் காதலியை பார்க்கச் சென்ற காதலன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை பொலிசார் சுட்டு பிடித்துள்ளனர்.
ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரனாய் மிஸ்ரா (28). பி.டெக் முடித்த இவர், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை, காலை 2.30 மணி அளவில் தனது காதலியை சந்திப்பதற்காக, தாவரகெரே பகுதிக்கு பிரனாய் மிஸ்ரா இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியே பைக்கில் வந்த மர்ம நபர்கள், சிலர் பிரனாய் மிஸ்ராவை வழி மறித்து கத்தியால் குத்தியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இவரை, அவ்வழியே வந்த நபர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொலை சம்பவத்திற்கும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கார்த்திக் என்பவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால் பொலிசார் அவரை சந்தேகித்துள்ளனர்.
இதனால் கார்த்திக் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைப் பகுதிக்கு அருகே இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிசார் அவனை பிடிக்க முயன்ற போது, அவன் பயங்கர ஆயுதங்களுடன் பொலிசாரைத் தாக்கியுள்ளான்.
இதில் 2 பொலிசார் காயமடைந்ததால், பொலிசார் அவனை சுட்டு பிடிக்க முடிவு செய்துள்ளனர். பொலிசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற கார்த்திக்கின் தோள் பட்டையில் பொலிசார் சுட்டதால், அவன் அந்த இடத்திலே விழுந்துள்ளான்.
இதையடுத்து பொலிசார் அவனை கைது செய்து மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்த விசாரணையில், பிரனாய் பெங்களூரு புறநகர்ப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கார்த்திக்கின் பைக்கில் மோதியதால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த வாக்கு வாதம் முற்றியதால், பிரனாய்யை பைக்கில் தொடர்ந்த கார்த்திக் குறித்த இடத்தில் தாக்கியோடு மட்டுமின்றி கத்தியை வைத்து கண்மூடித்தனமாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கியிருந்து தப்பியுள்ளான் என தெரியவந்துள்ளது.