நமது இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது மாரடைப்பாக மாறி உயிரை மாய்க்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக பரிமாணமெடுத்து மனிதனை முடக்கி விடுகிறது. மனிதன் வாழ வேண்டுமானால் அவனது இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடித்தே ஆக வேண்டும். இவ்வாறு துடித்து துடித்து மனிதனுக்கு வாழ்வை வழங்கும் இதயம் துடிப்பதற்கு சக்தி தேவை.
அந்த சக்தி இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களின் மூலம்தான் இதயத்திற்கு கிடைக்கிறது. இந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் ரத்தம் தடைபடுகிறது. இதனால், நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை போல் மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்படும்போது அது பக்கவாதமாக, பரிமாணம் எடுத்து மனித வாழ்வை சீர்குலைக்கிறது.
இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையான சத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவே சுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது. ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய “நைட்ரிக் ஆக்சைடு” என்ற ரசாயன பொருள் உதவுகிறது. இது நமது உடலில் உற்பத்தி ஆகும் பொருள். இதுதான் ரத்த குழாய்களுக்குள் சென்று அவற்றை சுருங்கி விரிய உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், குருதியில் கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது “நைட்ரிக் ஆக்சைடு’ சுரப்பது குறைகிறது. மேலும் மன இறுக்கமும், மனக்கவலையும் கூட நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை கெடுக்கிறது. புகை பிடிப்பது, மது அருந்துதல், அசைவ உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்றவை கூட இந்த நைட்ரிக் ஆக்சைடு சுரப்பதை குறைக்கிறது.
நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கி விரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படிய தொடங்கும். கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட காரணமாகிறது.
எனவே கோபத்தை குறைதுக்கொள்ளலாம், குழந்தைகளிடம் பேசி மகிழ்ந்தாலே போதும் பாதி மன இறுக்கம் போய்விடும்.