பல நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் பெற்றுள்ள நிலையில் மீளச் செலுத்தும் தவணை நாளுக்கு முன்னைய தினம் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இதில் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான செல்வம் யோகேஸ்வரி (26 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கிராமங்களில் மக்களை தேடிச் சென்று நுண் கடன் நிதி வழங்கும் சில நிறுவனங்களிடம் இருந்து இவர் கடன் பெற்றுள்ளார்.கணவன் அனுப்பும் அந்தப் பணத்திலிருந்தே இதுவரை காலமும் பல நிறுவனங்களிடமிருந்தும் தான் பெற்ற கடனுக்கான தவணைப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளார்.
இதனிடையே கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்ற கணவன் அங்கிருந்து நாடு திரும்பியுள்ள நிலையில் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்த முடியாமல் மனைவி திண்டாடியுள்ளார்.
அவ்வேளையில், இப்பெண் உறவினர்கள் பலரிடம் கடன் தவணைப் பணத்தைச் திருப்பிச் செலுத்துவதற்காக கடன் கேட்டும் உறவினர்கள் எவரும் பணம் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கட்டார் நாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றிருந்த அவரது கணவன் மாதாந்தம் குடும்பச் செலவுக்காக ஒரு தொகைப் பணமும் அனுப்பிக் கொண்டிருந்துள்ளார்.
குறித்த பெண் இன்றைய தினம், சுமார் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை கடன் தவணைப் பணமாகத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த நிலையில், உடற் கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகைளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.