மதுரை நகர் நேதாஜி சாலையில் உள்ளது சுந்தரர் மடம் என்று அழைக்கப்படும் பழமை வாய்ந்த தண்டாயுதபாணி சாமி கோவில். இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நாளைமறுநாள் (வியாழக் கிழமை) விரதகாப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சாமிக்கு ருத்ர ஜெப மகா அபிஷேகம், புஷ்பஅங்கி, சந்தன காப்பு அலங்காரம், லட்சார்ச்சனை நடக்கிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 25-ந்தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மகா ஸ்கந்த ஹோமமும் 6 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
9 மணிக்கு சாமி புஷ்ப அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை நடக்கிறது.
மாலை 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும், இரவு 7 மணிக்கு பூச்சப்பரத்தில் சாமி 4 மாசி வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
26-ந்தேதி பாவாடை தரிசனத்துடன் சாமி தங்க கவசத்தில் அருள்பாலிக்கிறார். பின்னர் புஷ்ப அங்கி அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளையராஜா, நிர்வாக அதிகாரி சக்கரையம்மாள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.