‘தர்மம்’ என்ற சிந்தனையை ஒரு சிறு வட்டத்திற்குள் வைத்தே மனிதன் வாழ்ந்து வருகிறான். ஆனால் அதன் விசாலம் கற் பனைக் கும் எட்டாத அளவு பரவி இருப்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பணம் படைத்தவன், இல்லாதவனுக்கு கொடுப்பது தான் ‘தர்மம்’ என்று கருதப்படுகிறது. அறிவு படைத்தவன் பிறருக்கு பாடம் சொல்லி கொடுப்பது, வலிமை படைத்தவன் தன் உறவுகளை தீயவர்களிடம் இருந்து காப்பது, சிரமப்படுபவர் களுக்கு அவர்கள் மீட்சி பெற உதவுவது என்று வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் பிறருக்கு உதவுவது கூட தர்மத்தின் ஒரு அங்கம் தான்.
தர்மச்செயல் அல்லது தர்ம சிந்தனை குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இஸ்லாம் தனது இறைமறையில் விரிவாக விளக்கியுள்ளது. அதுபோல அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தர்மம் குறித்தும், தர்மச்செயல் குறித்தும் இவ்வாறு விளக்கியுள்ளார்கள்:
‘உன் சகோதரனை சந்திக்கும் போது முகமன் சொல்லி புன்னகைப்பது கூட தர்மம் தான்’.
‘பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் கிடக்கும் முள்ளை எடுத்து பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவது அல்லது தடங்கலாய் கிடக்கும் மரங்களை, கற்களை அப்புறப்படுத்துவது, ஏன் அற்ப உயிரான சிறு எறும்பு பாதையில் ஊர்ந்து செல்லுமானால் அதற்கு வழிவிட்டு, அது தன் எல்லையை அடையும் வரை மனிதன் தன்னிடத்தில் தாமதித்து நிற்பதும் தர்மம் தான்’.
அல்லாஹ் விரும்பும் வகையில் நமது தர்மங்கள் அமைய வேண்டும் என்றால் சில வரைமுறைகளையும், கட்டளைகளையும் நிர்ணயம் செய்கின்றான்.
ஒருவன் தர்மம் செய்கின்ற அந்தஸ்தை அடைகிறான் என்றால் அது அல்லாஹ் அவனுக்கு அளித்த பிச்சை. அதுபோன்று, தன் தேவைக்காக ஒருவன் உன்னை நாடி வருகிறான் என்றால் அவன் தாழ்ந்தவன் அல்ல. உனக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடைகளை கொண்டு நீ ஆற்ற வேண்டிய ‘ஜகாத்’ என்ற கடமையை எளிதாய் நிறைவேற்ற அவன் மூலம் உனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை தரும் அவனும் ஒரு வகையில் உனக்கு தர்மம் செய்கிறான்.
இது தொடர்பான உன்னதமான விளக்கத்தை அல்லாஹ் தன் அருள்மறையிலே இவ்வாறு பதிவு செய்திருக்கின்றான்:
அல்லாஹ்வின் உவப்பைப் பெறுவதைத் தவிர வேறு எதற்காகவும் நீங்கள் செலவு செய்வதில்லையே! எனவே எந்த நல்ல பொருளை (இறைவழியில்) நீங்கள் செலவு செய்தாலும் அதற்குரிய நிறைவான கூலி உங்களுக்குக் கொடுக்கப்படும்; மேலும் நீங்கள் (ஒரு போதும்) அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (2:272)
‘மனிதன் தர்மம் செய்து விட்டான்’ என்ற ஒற்றை காரணத்திற்காக அவன் பெருமை கொள்ள எந்தவித தகுதியும் இல்லாதவன் என்பதை மிக அழகாக இங்கே எடுத்தியம்புகிறது அருள்மறை. ‘பெருமை கொள்ளாதீர்கள்’ என்று சொன்ன அருள்மறை அடுத்து சொல்கிறது, ‘தானம் செய்வதற்கு நல்லவற்றையே தேர்வு செய்யுங்கள்’ என்று.
“நல்லவற்றையே நீங்கள் தர்மமாக செலவு செய்யுங்கள், அவற்றில் கெட்டவற்றை கொடுக்க நினைக்காதீர்கள். ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால் அவற்றை நீங்கள் வெறுப்புடன் கண்களை மூடியவர்களாகவே தவிர வாங்கிக் கொள்ள மாட்டீர்களே. ஆகவே நீங்கள் விரும்பாத பொருட்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்”. (திருக்குர் ஆன் 2:267)
தேவை என்று ஒருவன் தன் வாசலில் வந்து விட்டால், நமக்கு தேவையில்லை என்று ஆகி விட்டதையோ அல்லது பழையதையோ, கெட்டுப்போனதையோ கொடுக்க முன் வருவது தான் மனித இயல்பாக இருக்கிறது. ஆனால் அல்லாஹ், ‘அவ்வாறு செய்யாதே’ என்று கட்டளையிட்ட பிறகு அதைச் செய்தால், அதற்கு நன்மை கிடைக்காது. மேலும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ததால் ஏற்படும் பாவச் சுமையும் அவர் மீது விழுந்து விடும்.
தர்மத்தின் அடுத்த கட்டளையாக அல்லாஹ் இவ்வாறு அறிவிக்கின்றான்:
“அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர் களுடைய இறைவனிடத்தில் உண்டு; இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்”. (2:262)
“கனிவான சொல்லும், (விரும்பாத விஷயங்களை) மன்னித்து விடுவதும், மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்புடையனவாகும். மேலும் அல்லாஹ் தன்னிறைவுள்ளவனாகவும், சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருக்கின்றான்”. (2:263)
எந்த தர்மத்தைச் செய்தாலும் அதை பிறருக்கு சொல்லி காட்டி, வாங்கியவனின் கண்ணியத்தை குலைப்பதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதற்குப்பதிலாக, அவரிடம் இனிய சொற் களைச் சொல்லி, அவர்களை சமாதானம் செய்வதையே இறைவன் விரும்புகிறான்.
தர்மம் யாருக்குச் செய்ய வேண்டும் என்பதை இஸ்லாம் தெளிவாக விளக்கியுள்ளது. வறுமையின் பிடியில் சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருப்பவர்களில் சிலர், ‘ஏற்பது இகழ்ச்சி’ என்கின்ற ஒரே காரணத்திற்காக தங்கள் வறுமையை வெளிக்காட்டாமல், இறைவனை நம்பி வைராக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அது போன்ற இறைபக்தியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தர்மம் செய்வது, தர்மத்தில் சாலச்சிறந்தது என்கிறது திருக்குர்ஆன். இதுபற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
“அவர்கள் மக்களிடத்தில் வருந்தியும் கேட்கமாட்டார்கள். இத்தகைய ஏழைகளுக்கு நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்த போதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன் கறிந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தருவான்”. (2:273)
அடுத்து அல்லாஹ் தர்மத்தின் இரண்டு நியதிகளைச் சொல்லித் தருகிறான். ‘தர்மம் என்பதை வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுங்கள் என்றும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் செய்யுங்கள்’ என்றும் சொல்கிறான்.
“நீங்கள் செய்யும் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நன்றே. ஏனெனில் அது பிறரையும் தர்மம் செய்யும்படி தூண்டும். ஆயினும் நீங்கள் அதனை மறைத்தே கொடுப்பது, அதுவும் ஏழைகளுக்கு கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த இருவகை தர்மமும் உங்கள் பாவங்களுக்கு பரிகாரம் ஆகும். நீங்கள் செய்யும் வெளிப்படையான மற்றும் மறைவான அனைத்தும் அல்லாஹ் நன்கு அறிவான்”. (2:271)
‘ஒருவன் குதிரை மேல் வந்து தர்மம் கேட்டாலும், அவனிடம் ஏன் எதற்கு என்று விளக்கம் கேட்காமல் கொடுத்துவிடுங்கள். அவர்கள் உள் அந்தரங்களை அல்லாஹ்வே அறிந்தவனாக இருக்கின்றான்’ என்று கண்மணி நாயகமும் நவின்றுள்ளார்கள்.
தர்மம் பற்றிய முழுமையான ஞானம் பெற்று, செயல்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்ற நல்லடியார்களாக நம்மை இறைவன் ஏற்றுக் கொள்வானாக.