ஆபிரிக்காவின் கொம்பு என வர்ணிக்கப்படும் சோமாலியாவில் நடத்தப்பட்ட பாரிய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு அறிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து இதுவரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் எதிலும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையென அரசியல் விமர்சகர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்று ஒருவர் உயிரிழந்திருந்தால், அல்லது ஒருவர் காயமடைந்திருந்தால் கூட அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குண்டுவெடிப்பில் 276 பொது மக்கள் கொல்லப்பட்டமைக்கு இதுவரை கண்டனங்கள் கூட தெரிவிக்கப்படவில்லை. கொல்லப்பட்ட மக்களுக்காக இதுவரை அமெரிக்காவும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் ஏன் அனுதாபம் கூட வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய விமர்சகர்கள், புவிசார் அரசியலில் சோமாலிய நாட்டுக்கான முக்கியத்துவம் இருப்பதாக உணரப்படவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
இதேபோன்றதொரு நிலைதான் ஈரானின் அலப்போ நகரில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில், 50ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தபோதும் ஐக்கிய நாடுகள் சபை கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் மௌனம் சாதித்ததாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர் என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
இதே நிலைதான், 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறுதிப் போரில் இலங்கைப் படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் சிக்குண்டு உயிரைக் காப்பாற்ற அவலக்குரல் எழுப்பியபோதும் மெத்தனப் போக்கை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கடைப்பித்தது. ஐக்கிய நாடுகள் சபை ஆறா அமர இருந்து யோசித்துக் கொண்டிருந்தது.
ஆனால் முள்ளிவாய்க்கால் அவலங்களுடன் யுத்தம் அழிக்கப்பட்ட பின்னர், ஜெனீவா மனித உரிமைச் சபையில், இலங்கைக்கு எதிரான பிரேரணை அது, இது என்றெல்லாம் பெரும் கண்டனங்கள், அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டமை புவிசார் அரசியலின் வேஷம் என்றும், தமக்குச் சாதகமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கவே, அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது பெருவாரியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டினர் என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறினார்.
புவிசார் அரசியல், தமக்குச் சாதகமாக இருந்தால் மனித உரிமை, போர்க்குற்றம் என்றெல்லாம் பேசி நாட்டையே பிரித்துக் கொடுப்பார்கள். அதற்கு உதாரணமாக ரஷியாவில் இருந்து கொசாவா தனி நாடாக பிரித்துக் கொடுக்கப்பட்டதை விமர்சகர்கள் உதாரணம் காண்பித்தனர்.
ஆகவே புவிசார் அரசியல் (Geological politics) சாதகமற்ற நிலை அல்லது பிராந்தியத்தில் முக்கியத்துவம் இல்லையென்றால் மனிதாபிமானம், சுயநிர்ணய உரிமை, இறைமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
இதுதான் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் மனிதாபிமானம் என்றும் உண்மையான மனித குல நேசிப்பு, சர்வதேச அரசியலில் இல்லையெனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
எனவே குர்திஸ்தான், கற்றலோனியா போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்கள்தான், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இந்தப் புவிவிசார் அரசியல் விளையாட்டுக்களை முடிவுக்குக் கொண்டு வரும் என விமர்சகர்கள் எடுத்துக் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.